Tuesday, March 15, 2011

ஐ.டி.துறையில் 2.25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

மும்பை, மார்ச் 13: நடப்பாண்டில் தகவல் தொழில்நுட்பத் துறையில் 2.25 லட்சம் பேர் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள் என டிலோய்ட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.தகவல் தொழில்நுட்பம் மற்றும் வெளி ஒப்படைப்பு பணிகள் மூலம் நடப்பாண்டின் வருவாய் ரூ.3 லட்சத்து 36 ஆயிரத்து 990 கோடியை எட்டும். இதில் உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 5.8 சதவீதமாக இருக்கும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிவோரின் எண்ணிக்கை இந்தாண்டில் 2.23 லட்சம் அதிகரிக்கும். மறைமுகமாக 80 லட்சம் பேர் வேலைவாய்ப்புப் பெறுவார்கள். சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி நிலை மாறி, இப்போது மீண்டும் பழைய நிலையை அடைந்துள்ளதால் தகவல் தொழில்நுட்பத்துறையில் இன்போசிஸ், டிசிஎஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் உள்ள பணியிடங்களை நிரப்பும் என்று எதிர்பார்ப்பதாக டிலோய்ட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. வட அமெரிக்க சந்தையின் வளர்ச்சியோடு ஒப்பிடும்போது, ஐரோப்பிய, ஆசியச் சந்தைகளின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கணிசமான வாய்ப்புகளை பெற்று நல்ல வளர்ச்சியை எட்டும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் மொத்த வருவாய் ரூ. 3 லட்சத்து 36 ஆயிரம் கோடியில் பெரும் பகுதி மென்பொருள் துறை மூலமாக கிடைக்கும். சாப்ட்வேர் ஏற்றுமதியின் மூலம் 17 சதவீத வருவாய் கிடைக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இன்போசிஸ், டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப இருப்பதால் இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் வேலைவாய்ப்புப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: