Monday, October 27, 2014

லாட்டரி சீட்டு விற்றவர் இன்று ஐ.ஏ.எஸ்.,அமெரிக்க அதிபர் அளித்த கவுரவம்


காரைக்குடி:“நான் கற்ற கல்வியால் தான் எனக்கு அமெரிக்க அதிபரின் மாளிகையில் கவுரவம் கிடைத்தது,” என காரைக்குடியில் வருமான வரி இணை கமிஷனர் நந்தகுமார் பேசினார்.
காரைக்குடி அருகே ஸ்ரீராம்நகர் யுனிவர்சல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவன ஆண்டு விழா நடந்தது.

இணை கமிஷனர் நந்தகுமார் பேசியதாவது:நாம் சாப்பிடுவதில் கூட நல்லவற்றை தேர்வு செய்கிறோம். ஆனால் படிப்பு விஷயத்தில் மட்டும் பிள்ளைகளின் விருப்பத்திற்கு ஏற்ற வாய்ப்பை தருவதில்லை. வாழ்க்கையை எட்டிப்பிடிக்கும் போது கிடைப்பதுடன் நின்று விடுகிறோம். சிறந்த கல்வியை தேர்வு செய்வது கட்டாயம்.

நான் எனது சிறுவயதில் வீட்டுப்பாடம் கொடுத்தால் எழுதத் தெரியாது. ஆறாம் வகுப்புடன் என் படிப்பு நின்றது. பின், லாட்டரி சீட்டுக்கள் விற்பனை, மெக்கானிக் ஷாப், ரேடியோ பழுதுபார்த்தல் பணிகளை செய்தேன். படிப்பை நிறுத்திய பின் தான் அதன் அருமை தெரிந்தது. பணி செய்து கொண்டே படித்தேன். அரசுக் கல்லுாரியில் பி.ஏ., (ஆங்கில இலக்கியம்) சேர்ந்தேன். கஷ்டப்பட்டு தேர்ச்சி பெற்றேன். கடந்த 2004ல் 12 லட்சம் பேர் எழுதிய சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றேன்; ஐ.ஏ.எஸ்., பணியில் சேர்ந்து பின், விருப்பத்தின் அடிப்படையில் வருமான வரித்துறையில் பணிபுரிகிறேன்.

வீட்டிலிருந்து சாப்பிட ஓட்டலுக்கு 5 கி.மீ., நடந்தே சென்றேன். கல்வி தந்த வளர்ச்சியால் எனக்கு பிரதமர், ஜனாதிபதி அளித்த விருந்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. சாதாரண குடும்பத்தை சேர்ந்த நான் உத்தரபிரதேச தேர்தல் பார்வையாளராக இருந்தேன். என் பணியை அறிந்த அமெரிக்க அதிபர் ஒபாமா என்னை தேநீர் விருந்துக்கு அழைத்து கவுரவப்படுத்தினார். இந்த கவுரவம் அனைத்தும் என் கல்விக்கு தான் கிடைத்தது.இவ்வாறு பேசினார்.

பாரத் கல்வி குழும தலைவர் விஸ்வநாத கோபாலன், இணை ஒருங்கிணைப்பாளர் ஆதீனம், கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வர் கல்யாணராமன் பங்கேற்றனர்.

Thursday, October 16, 2014

10 வயது சிறுவனின் கனவை நிறைவேற்றி நெகிழச்செய்த ஐதராபாத் போலீஸ் கமிஷனர்..



மரணத்தை எதிர்நோக்கும் 10 வயது சிறுவன் சாதிக் ஐதராபாத் கமிஷனர் அலுவலகத்தில் சல்யூட் மரியாதையை ஏற்கும் காட்சி. | படம்: மொகமது யூசுப்
மரணத்தை எதிர்நோக்கும் 10 வயது சிறுவன் சாதிக் ஐதராபாத் கமிஷனர் அலுவலகத்தில் சல்யூட் மரியாதையை ஏற்கும் காட்சி. | படம்: மொகமது யூசுப்
மரணத்தை எதிர்நோக்கும் 10 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றியது ஐதராபாத் காவல்துறை. சாதிக் என்ற இந்த 10 வயதுச் சிறுவனை ஐதராபாத் போலீஸ் கமிஷனர் நாற்காலியில் உட்கார வைத்து சிறுவனின் வாழ்நாள் கனவை நிறைவேற்றியுள்ளனர்.

சாதிக் என்ற இந்த 10 வயதுச் சிறுவன் 'Terminally-ill' நோயாளி ஆவார். டெர்மினலி இல் என்றால் அவருக்கு மரணம் எப்போது வேண்டுமானாலும் சம்பவிக்கும். காரணம் இவருக்கு இருக்கும் நோய்க்கு எந்த வித சிகிச்சையும் பலனளிக்காது என்று முடிவுகட்டப்பட்ட ஒரு நோயாளி ஆவார் அவர்.

சாதிக்கிற்கு இருக்கும் நோய்க்கு மருத்துவ தீர்வு கிடையாது என்ற செய்தி அவரது குடும்பத்தினருக்கு 5 மாதங்கள் முன்புதான் தெரியவந்துள்ளது. இவர் எம்.என்.ஜே. இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆன்காலஜி என்ற அரசு மருத்துவக் கழகத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

பின்னர் சாதிக்கின் தந்தை மொகமது ரஹீமுதீன், விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவென்றே செயல்படும் 'மேக் எ விஷ் ஃபவுண்டேஷன்' என்ற அமைப்புடன் தொடர்பு கொண்டு காவல்துறையில் உயர் பதவியாற்ற வேண்டும் என்ற சாதிக்கின் தீராத அவாவை நிறைவேற்ற முடிவு செய்தனர்.

அந்த அமைப்பின் உதவியுடன் ஐதராபாத் உயர்மட்ட காவல்துறையுடன் தொடர்பு கொண்டு சாதிக்கை ஒருநாள் கமிஷனர் நாற்காலியில் அமரவைக்க முடிவெடுக்கப்பட்டது.

அதனடிப்படையில் நன்றாக இஸ்திரி போடப்பட்ட போலீஸ் சீருடை, பதக்கங்கள், சாதனை பேட்ஜ்கள், பளபளக்கும் ஷூக்கள், தெலங்கானா போலீஸ் என்று பொறிக்கப்பட்ட போலீஸ் துறை பெல்ட் ஆகியவற்றுடன் கமிஷனருக்கேயுரிய மிடுக்குடன் சாதிக் ஐதராபாத் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார்.

ஒருநாள் கமிஷனர் கையெழுத்திடுவதற்காக கோப்புகள் சாதிக் மேசையில் வைக்கப்பட்டன.

ஐதராபாத் நகர கமிஷனர் எம்.மகேந்தர் ரெட்டி நெகிழ்ச்சியுடன் சாதிக்கை வரவேற்று தனது நாற்காலியில் சிறுவனை உட்காரச் செய்தார். சில மணி நேரங்கள் கமிஷனராக சாதிக் பணியாற்றவும் அனுமதித்தார்.

என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு சாதிக் சட்டென, “நான் ரவுடிகளைப் பிடிப்பேன்” என்றார் உற்சாகமாக. மேலும் நகரை அமைதியாக வைத்திருக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும், போக்குவரத்து விவகாரங்களை கவனிப்பேன் என்றும் 10 வயது கமிஷனர் கூறி அனைவரையும் அசத்தினார்.

முன்னதாக புதிய கமிஷனரை எப்படி வரவேற்க வேண்டுமோ அத்தகைய சடங்குகளுடன் கமிஷனர் அலுவலகத்தில் சாதிக்கிற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறுவன் சாதிக் கமிஷனர் அலுவலக கட்டிடத்தில் நடந்து வந்த போது, 'புதிய கமிஷனரை' காவல்துறை ஊழியர்கள் வரவேற்றனர்.

அதன் பிறகே கமிஷனர் மகேந்தர் ரெட்டியின் அறையில் அவரது நாற்காலியில் அமர்ந்தார் சாதிக்.

செய்தியாளர்களிடம் சாதிக் கூறும் போது, “என்னுடைய 3 மாமாக்கள் ராணுவத்தில் சேவை புரிந்து வருகின்றனர். மேலும் இரண்டு பேர் கரீம்நகரில் காவல்துறையில் சேவை செய்து வருகின்றனர்” என்றார்.

மகனின் விதி ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு விட்ட கசப்பான நிலையில் சற்றே மகிழ்ச்சியடைந்த தந்தை மொகமது ரஹிமுதீன், "எனது மகன் போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால் வாழ்க்கை அவனை வேறு ஒன்றிற்கு காத்திருக்கச் செய்துள்ளது" என்றார்.

"மரணத்தை எதிர்நோக்கும் சிறுவனின் கனவை நிறைவேற்ற முடிந்தது எங்களுக்கு மன நிறைவை அளிக்கிறது" என்று கமிஷனர் மகேந்தர் ரெட்டி தெரிவித்தார்.

Wednesday, October 15, 2014

கனவு நாயகன் கலாம்; இன்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாள்

திரு.கலாம் அவர்களுக்கு நாம் ஒரு சல்யூட் அடிப்போம்.
'உறக்கத்தில் வருவதல்ல கனவு... உன்னை உறங்கவிடாமல் செய்வது தான் கனவு' என்ற தாராக மந்திரத்தை 64 கோடி இந்திய இளைஞர்களின் மனதில் விதைத்தவர் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம். வளர்ந்த இந்தியாவாக 2020க்குள் உருவாக்கும் லட்சியத்துடன், இன்றைக்கும் இந்தியா முழுவதும் சென்று அனைத்து தரப்பினரையும், குறிப்பாக 18 கோடி இளைஞர்களை சந்தித்து உங்களால் முடியும் என்ற நம்பிக்கையை விதைத்து ஊக்கமும், ஆக்கமும் கொடுத்து வருகிறார்.

நாட்டின் 11வது ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம் அரசியலமைப்பு சட்டப் பணியை முறையாக நிறைவேற்றியதுடன், தன் பணி முடிந்து விடவில்லை என்றார். அனைத்து தரப்பினரும் ஒரு தொலை நோக்கு பார்வையுடன், நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன், ஒற்றுமையாக உழைத்தால் வளர்ந்த இந்தியாவை 2020க்குள் அடைய முடியும் எனக்கூறி நம்பிக்கையை ஏற்படுத்தினார்.
தொலை நோக்கு திட்டங்கள் :


ஜனாதிபதியாக இருந்த போது 15 மாநிலங்களுக்கு சென்று, அந்தந்த மாநிலங்களின் வளம், சிறப்பான செயல்பாடு, தீட்ட வேண்டிய தொலை நோக்கு திட்டங்கள் குறித்து சட்டசபைகளில் விளக்கினார். பல மாநிலங்கள் அந்த திட்டங்களை இலக்காக கொண்டு செயல்பட்டன.லோக்சபாவில் 'வளர்ந்த இந்தியா 2020' தொலை நோக்கு திட்டத்தை குறிப்பிட்டு, எம்.பி.க்களுடன் சிற்றுண்டி சந்திப்பு நடத்தி, அதன் முக்கியத்துவத்தை விவரித்தார். எல்லோருக்கும் எரிசக்தி பாதுகாப்பு என்பது குறித்து சிந்தித்து, அதனை 2030க்குள் அடைய இலக்கு நிர்ணயித்து மக்களுக்கு விளக்கினார். ஐதராபாத்தில் ஜனாதிபதிக்கென ஒரு சொகுசு மாளிகை உண்டு. ஆண்டுக்கொரு முறை ஜனாதிபதிகள் ஓய்வெடுக்க பயன்படுத்துவர். அந்த மாளிகையை, பயோ எரிசக்திக்கென கொள்கை வகுக்க மாநாடு நடத்த பயன்படுத்த வேண்டும் எனக்கூறி அங்கு அனைவரையும் அழைத்து விவாதித்து அதில் பிறந்தது தான் 65 ஆயிரம் டன் பயோ எரிசக்தி கொள்கை.
கல்வியில் மாற்றம் :


தொடக்க கல்வியில் மாற்றங்கள் வேண்டும் என ஒரு குடியரசு தின விழாவில் கலாம் வலியுறுத்தியதால், சி.பி.எஸ்.இ., கல்வி முறையில் மாற்றம் ஏற்பட்டது. பேராசிரியர் யஷ்பால் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்து பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. அவரது வலியுறுத்தலால், 'நேஷனல் நாலெஜ் நெட்ஒர்க்' என்ற இணைப்பை மத்திய அரசு உருவாக்கி 5000 உயர்கல்வி நிலையங்களுக்கு உத்வேகத்தை கொடுக்க வைத்தது.உயர்கல்வி, ஆராய்ச்சி என சிந்தித்தவர் ஒரு நாள் என்னையும், மேஜர் ஜெனரல் சுவாமிநாதனையும் அழைத்து, இந்தியாவின் அடுத்த கட்ட ஆராய்ச்சி நானோ அறிவியல் தொழில்நுட்பத்தில் எவ்வாறு இருக்க வேண்டும் என விவாதித்தார். மாநாடு நடத்தி அதற்கான திட்டத்தை தயாரிக்க உத்தரவிட்டார். இதுதொடர்பாக அடுத்த 15 ஆண்டுகளுக்கான திட்டங்களை தீட்டி, ரூ.1500 கோடிக்கான முதற்கட்ட அறிக்கையை நாங்கள் சமர்ப்பித்தோம்.
விஞ்ஞானிகளுக்கு விருந்து :



வழக்கமாக ஜனாதிபதி மாளிகையில் விருந்து வைபவம், உலகத் தலைவர்களுக்கு மட்டுமே நடக்கும். இம்முறையை தகர்த்து, இந்திய விஞ்ஞானிகளுக்கும், இளம் ஆராய்ச்சியாளர்களுக்கும் ஜனாதிபதியாக இருந்த போது விருந்துக்கு (பேன்குவட் பார்ட்டி) ஏற்பாடு செய்தார். அந்த விருந்துக்கு அவர் அழைத்த மற்ற விருந்தினர்கள் யார் தெரியுமா? திட்ட கமிஷன் துணை தலைவர், மனித வள மேம்பாட்டு அமைச்சர், அறிவியல் தொழில் நுட்ப அமைச்சர். அவர்களிடம் மாநாட்டின் பரிந்துரையாக சமர்ப்பித்த ரூ.1500 கோடி நானோ தொழில் நுட்ப ஆய்வறிக்கையை விளக்கினார். அத்திட்டம் மத்திய அரசால் உடன் ஏற்கப்பட்டு, இரு கட்டங்களாக நிதி ஒதுக்கப்பட்டு, நானோ அறிவியல் ஆராய்ச்சி இந்தியாவில் உத்வேகம் பெற்றது.
தினமலர் நாளிதழும் கலாமும் :



கிராமப்புறங்கள் வளர்ச்சி அடைந்தால் தான் நாடு வளர்ச்சி அடையும் என 'புரா' திட்டத்தை கொடுத்தார். கலாம் ஜனாதிபதியானதும் முதலில் வலியுறுத்தியது நதிநீர் இணைப்பு திட்டம். அப்போதைய பிரதமர் வாஜ்பாய், அறிஞர் குழு அமைத்து திட்ட அறிக்கை தயாரிக்க உத்தரவிட்டார். அதிதிறன் நீர் வழிச்சாலை திட்டத்தால், 1500 பி.சி.எம் வெள்ள நீரை 15000 கி.மீ., நீர்வழிச்சாலையில் மாநிலங்கள் பயன்பெற முடியும் என தினமலர் நாளிதழில் கலாமும், நானும் இணைந்து எழுதினோம். இதனை தொடர்ந்து பிரதமர் மோடி, நதிநீர் இணைப்பு ஆய்வறிக்கை தயாரிக்க ரூ.100 கோடி ஒதுக்கியிருக்கிறார். இதனால் விவசாயம் செழிக்கும். இளைஞர்களுக்கு மதிப்பு கூட்டப்பட்ட வேலைவாய்ப்பு கிடைக்கும். 2050ல் உலகம் 9 பில்லியன் மக்கள் தொகையாக மாறும்போது, முதல் உணவளிக்கும் நாடாக இந்தியா திகழும்.
இரண்டு கோடி மரங்கள் :



நுாறு கோடி இந்தியர்கள் 100 கோடி மரம் நட வேண்டும் என்ற இயக்கத்தை ஒவ்வொருவரும் செய்ய கலாம் கேட்டுக் கொண்டார். பல்வேறு மாநிலங்களுக்கு அவர் சென்று வலியுறுத்தியதால், 2 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளன. பதினெட்டு கோடி மாணவர்களிடம் ஒரு உறுதி மொழி ஏற்க வைத்தார். அதாவது உன் வீட்டை, தெருவை சுத்தமாக்கினால், நாடு சுத்தமாகும் என்றார். தற்போது பிரதமர் மோடி அதை ஒரு இயக்கமாக மாற்றி விட்டார்.ஒருவரை பற்றி பல குற்றச்சாட்டுகளை கூறினால் கலாம் அதை அமைதியாக கேட்பார். அவர்களை பற்றி இரு நல்ல விஷயங்களை கூறி, அதை மட்டும் பார் என்பார். நம் சிந்திக்கும் திறனை அதிகப்படுத்துவதுடன், அதில் என்ன புதுமை இருக்கிறது எனக் கேட்டு நம்மை மாற்றி சிந்திக்க வைப்பார்.
உன்னதமான தலைவர் :


நற்சிந்தனைக்கு இடமளிப்பார். எதிர்மறை சிந்தனைகளை தவிர்ப்பார். பேசுவதிலும், எழுதுவதிலும், எண்ணத்திலும் இந்தியாவின் வளர்ச்சியை பற்றி மட்டுமே சிந்திக்க வைப்பார். அறிஞர்களை அழைத்து விவாதித்து, நல்ல கருத்துக்களை மட்டும் எடுத்து கொண்டு அதன் மீதான முடிவை அறிவிப்பார். ஒரு கொள்கை சார்ந்த விவாதத்தில், அவர் தன்னையே விமர்சிக்குமளவுக்கு நேர்ந்தாலும், உரிமை கொடுத்து விமர்ச்சிக்க வைத்து, அதில் ெதளிவு பெற்று நல்ல முடிவு எடுப்பதில் அவருக்கு நிகர் அவர் தான். பழிவாங்கும் உணர்வு அவரிடம் இருக்காது. தன்னிடம் பயிற்சி பெறும் யாராக இருந்தாலும், அவர்களது தலைமை பண்பை வளப்படுத்துவதிலும், பல்வேறு சோதனைகளுக்கு ஆளாக்கி வெற்றி ெபறவைப்பதிலும் கலாம் ஒரு உன்னத தலைவர்.
தினமும் 10 ஆயிரம் பேர் :



64 கோடி இந்திய இளைஞர்களை நம்பி இந்த 83 வயதிலும் மாதத்தில் 20 நாட்கள் இந்தியா முழுமைக்கும் சென்று ஒரு நாளிலே குறைந்தது 10 ஆயிரம் மக்களை, இளைஞர்களை சந்தித்து உரையாடுகிறார். வழிகாட்டியாக, இளைஞர்களின் கனவு நாயகனாக இருக்கும் கலாம் பிறந்த இந்த நன்னாளில், 'இந்தியாவை வளமான நாடாக்கி காட்டுவோம்' என உறுதி மொழி ஏற்போம்.குழந்தைகளின் கேள்விக்கு பதிலளிக்கையில் டாக்டர் கலாம், '125 கோடி மக்களின் முகத்தில் என்றைக்கு புன்னகை தவழ்கிறதோ, அன்று தான் என் நாடு வளமான நாடு என்பதன் அர்த்தம் விளங்கும்' என்றார். அது தான் தன் பணி என்றார். கலாமின் கனவை நனவாக்குவோம்.

Monday, October 13, 2014

பூ பூக்கும் ஓசை

Photo Gallery

பூ பூக்கும் ஓசையை இந்த வண்ணத்து பூச்சியாவது கேட்டிருக்குமா.... இடம்: தேனி.

அப்துல் கலாமோடு பொன்னான பொழுதுகள்- பொன்ராஜ்



படிக்கிற போது யாரை 'ரோல் மாடலாக' கருதினாரோ அவரிடமே பணிபுரியும் நிலை உருவானால்? அந்த வெற்றி வாழ்க்கைக்கு சொந்தக்காரர்... விஞ்ஞானி, கல்வியாளர், எழுத்தாளர், பேச்சாளர், சமூக ஆர்வலர் என பல்வேறு முகங்கள் இவருக்குண்டு. விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படிப்பை துவக்கி, நாட்டின் முதல் குடிமகனுக்கு அறிவியல் ஆலோசகராக பணிபுரிந்திருந்தாலும் கூட மண் மணம் மாறாமல் பேசுகிறார். அவர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் வி.பொன்ராஜ் மதுரை வந்த அவருடன் பேசியதிலிருந்து...
* பள்ளி, கல்லூரி காலங்கள் எப்படி?
விருதுநகர் மாவட்டம் தோணுகால் என் சொந்த ஊர். பள்ளி படிப்பை அங்கு துவக்கினேன். ஆமாத்தூரில் தொடக்க கல்வி, விருதுநகர் சுப்பையா நாடார் பள்ளியில் மேல்நிலை கல்வி முடித்தேன். நாடார் கல்லூரியில் இளங்கலை படிப்பு, பாரதிதாசன் பல்கலையில் எம்.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்தேன்.
போர்விமான தயாரிப்பு பணியில்:


* விஞ்ஞானியாக விரும்பினீர்களா?
பள்ளியில் பிளஸ் 2 படித்த போதுதான், இந்தியாவின் முதல் சொந்த தயாரிப்பான எஸ்.எல்.வி.,3, ரோகிணி ஸ்டிலைட்டுடன் விண்ணில் பாய்ந்தது. பின்னணியில் விஞ்ஞானி அப்துல் கலாம் இருந்ததையறிந்து அவரை 'ரோல் மாடலாக' எண்ணி விஞ்ஞானியாக விரும்பினேன். பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸில் ஜூனியர் விஞ்ஞானியாக 1989ல் சேர்ந்தேன். மதுரை காமராஜ் பல்கலையில்1991-95 வரை ஜூனியர் இன்பர்மேஷன் சயின்டிஸ்ட் ஆக பணிபுரிந்தேன். மீண்டும் பெங்களூரு ஏரோநாட்டிக்கல் டெவலப்மெண்ட் ஏஜன்ஸியில் சயின்டிஸ்ட் 'சி' அந்தஸ்தில் சேர்ந்தேன். அதன் இயக்குனர் ஜெனரலாக இருந்த அப்துல் கலாம் கீழ் இலகுரக போர் விமான தயாரிப்பு பணியில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டியது.
* கலாம் கீழ் பணிபுரிவோம் என எதிர்பார்த்தீர்களா
ரோல் மாடலாக நினைத்தவரிடமே(அப்துல் கலாம்) பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. 2002ல் அவர் ஜனாதிபதியானதும் என்னையும் வரச் சொல்லி விட்டார்.
* என்ன காரணம்?
பணிதிறமையை பார்த்து தான். தகவல் தொழில் நுட்ப தொடர்புக்கு அவருக்கு ஆட்கள் தேவையாக இருந்தது.
விசாலமான பார்வை:


* கலாமுடன் பணிபுரிந்த அனுபவம்?
அப்துல் கலாம் எப்போதும் உயர்வான எண்ணங்களை சிந்திக்க வைப்பார். அடுத்தவரை பற்றி எப்போதும் உயர்வாகவே பேசுவார். மற்றவர்களையும் பேச வைப்பார். எண்ணுவதை பெரியதாக எண்ண வேண்டும் என்பார். கஷ்டப்பட்டு பெரிய லட்சியத்தை அடைய வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் விதைப்பார். அவருக்கு கீழ் பணி என்பது கடவுள் கொடுத்த வரம். அவரிடம் சேர்ந்த பிறகே நாட்டை பற்றிய விசாலமான பார்வை ஏற்பட்டது.
* மாணவர்களும், கலாமும்- இந்த ஈர்ப்பு எப்படி ஏற்பட்டது?
நாட்டில் 18 கோடி இளைஞர்கள், மாணவர்களை அப்துல் கலாம் இதுவரை சந்தித்துள்ளார். நாட்டின் வருங்காலத்தை நிர்ணயிப்பது குழந்தைகள் தான். அவர்கள் மனதில் நம்பிக்கை விதையை விதைக்க வேண்டும் என அடிக்கடி கலாம் கூறுவார்.
உறங்க விடாமல் செய்வதே கனவு:


* கலாமிடம் கவர்ந்த குணம் எது?
முடியாது என ஒரு போதும் சொல்ல மாட்டார். எது முடியாத செயலாக இருக்கிறதோ அதை செய்ய நினைப்பார். ஒருவர் குறித்து புறம் கூறினால் கேட்டு கொள்வார். பின் அவரை பற்றிய நல்ல குணங்களை பட்டியலிடுவார். முடிந்த விஷயங்களை பேச மாட்டார். செய்ய வேண்டியதை மட்டும் பேசுவார். உறங்கும் போது வருவதல்ல கனவு... உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு... என நம்பிக்கையை விதைப்பார்.
* கலாம் எண்ணப்படி 2020ல் இந்தியா வல்லரசாகுமா?
கலாம் ஜனாதிபதியாக இருந்த போது, 15 மாநிலங்களுக்கு சென்று அதிகாரிகளுடன் பேசும் வாய்ப்பு கிட்டியது. அம்மாநிலங்களின் வளர்ச்சி திட்டங்களை இயற்றும் சவாலான பணியிலும் ஈடுபட்டேன். அவை வளர்ந்த மாநிலங்களாக உருவாவதற்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்த தூண்டுதலாக இருந்தார். அம்மாநில சட்டசபைகளிலும் கலாம் பேசினார். மாநிலங்களின் வளம், சிறப்பு, பிரச்னைகள் என்ன என கண்டறிந்து வளர்ச்சி பாதையில் செல்ல முடியும் என்பதற்கான திட்டங்களை விளக்கினார். அவரும், நானும் 'ஏ மேனிபெஸ்டோ பார் சேஞ்ச்' (மாற்றத்திற்கான ஒரு சாசனம்) நூலை எழுதியுள்ளோம். ஊராட்சி முதல் பார்லிமென்ட் வரை வளர்ச்சி அரசியலில் எப்படி ஈடுபடுவது, அதற்கு எப்படி சமூக, பொருளாதார கொள்கை மாற்றங்களை கொண்டு வருவது என பல அம்சங்களை கலாம் தெரிவித்துள்ளார். அதன்படி செயல்பட்டால், 2020ல் இந்திய வளர்ந்த நாடாகும்.
தொடர்புக்கு: vponraj@gmail.com