Thursday, October 16, 2014

10 வயது சிறுவனின் கனவை நிறைவேற்றி நெகிழச்செய்த ஐதராபாத் போலீஸ் கமிஷனர்..



மரணத்தை எதிர்நோக்கும் 10 வயது சிறுவன் சாதிக் ஐதராபாத் கமிஷனர் அலுவலகத்தில் சல்யூட் மரியாதையை ஏற்கும் காட்சி. | படம்: மொகமது யூசுப்
மரணத்தை எதிர்நோக்கும் 10 வயது சிறுவன் சாதிக் ஐதராபாத் கமிஷனர் அலுவலகத்தில் சல்யூட் மரியாதையை ஏற்கும் காட்சி. | படம்: மொகமது யூசுப்
மரணத்தை எதிர்நோக்கும் 10 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றியது ஐதராபாத் காவல்துறை. சாதிக் என்ற இந்த 10 வயதுச் சிறுவனை ஐதராபாத் போலீஸ் கமிஷனர் நாற்காலியில் உட்கார வைத்து சிறுவனின் வாழ்நாள் கனவை நிறைவேற்றியுள்ளனர்.

சாதிக் என்ற இந்த 10 வயதுச் சிறுவன் 'Terminally-ill' நோயாளி ஆவார். டெர்மினலி இல் என்றால் அவருக்கு மரணம் எப்போது வேண்டுமானாலும் சம்பவிக்கும். காரணம் இவருக்கு இருக்கும் நோய்க்கு எந்த வித சிகிச்சையும் பலனளிக்காது என்று முடிவுகட்டப்பட்ட ஒரு நோயாளி ஆவார் அவர்.

சாதிக்கிற்கு இருக்கும் நோய்க்கு மருத்துவ தீர்வு கிடையாது என்ற செய்தி அவரது குடும்பத்தினருக்கு 5 மாதங்கள் முன்புதான் தெரியவந்துள்ளது. இவர் எம்.என்.ஜே. இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆன்காலஜி என்ற அரசு மருத்துவக் கழகத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

பின்னர் சாதிக்கின் தந்தை மொகமது ரஹீமுதீன், விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவென்றே செயல்படும் 'மேக் எ விஷ் ஃபவுண்டேஷன்' என்ற அமைப்புடன் தொடர்பு கொண்டு காவல்துறையில் உயர் பதவியாற்ற வேண்டும் என்ற சாதிக்கின் தீராத அவாவை நிறைவேற்ற முடிவு செய்தனர்.

அந்த அமைப்பின் உதவியுடன் ஐதராபாத் உயர்மட்ட காவல்துறையுடன் தொடர்பு கொண்டு சாதிக்கை ஒருநாள் கமிஷனர் நாற்காலியில் அமரவைக்க முடிவெடுக்கப்பட்டது.

அதனடிப்படையில் நன்றாக இஸ்திரி போடப்பட்ட போலீஸ் சீருடை, பதக்கங்கள், சாதனை பேட்ஜ்கள், பளபளக்கும் ஷூக்கள், தெலங்கானா போலீஸ் என்று பொறிக்கப்பட்ட போலீஸ் துறை பெல்ட் ஆகியவற்றுடன் கமிஷனருக்கேயுரிய மிடுக்குடன் சாதிக் ஐதராபாத் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார்.

ஒருநாள் கமிஷனர் கையெழுத்திடுவதற்காக கோப்புகள் சாதிக் மேசையில் வைக்கப்பட்டன.

ஐதராபாத் நகர கமிஷனர் எம்.மகேந்தர் ரெட்டி நெகிழ்ச்சியுடன் சாதிக்கை வரவேற்று தனது நாற்காலியில் சிறுவனை உட்காரச் செய்தார். சில மணி நேரங்கள் கமிஷனராக சாதிக் பணியாற்றவும் அனுமதித்தார்.

என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு சாதிக் சட்டென, “நான் ரவுடிகளைப் பிடிப்பேன்” என்றார் உற்சாகமாக. மேலும் நகரை அமைதியாக வைத்திருக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும், போக்குவரத்து விவகாரங்களை கவனிப்பேன் என்றும் 10 வயது கமிஷனர் கூறி அனைவரையும் அசத்தினார்.

முன்னதாக புதிய கமிஷனரை எப்படி வரவேற்க வேண்டுமோ அத்தகைய சடங்குகளுடன் கமிஷனர் அலுவலகத்தில் சாதிக்கிற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறுவன் சாதிக் கமிஷனர் அலுவலக கட்டிடத்தில் நடந்து வந்த போது, 'புதிய கமிஷனரை' காவல்துறை ஊழியர்கள் வரவேற்றனர்.

அதன் பிறகே கமிஷனர் மகேந்தர் ரெட்டியின் அறையில் அவரது நாற்காலியில் அமர்ந்தார் சாதிக்.

செய்தியாளர்களிடம் சாதிக் கூறும் போது, “என்னுடைய 3 மாமாக்கள் ராணுவத்தில் சேவை புரிந்து வருகின்றனர். மேலும் இரண்டு பேர் கரீம்நகரில் காவல்துறையில் சேவை செய்து வருகின்றனர்” என்றார்.

மகனின் விதி ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு விட்ட கசப்பான நிலையில் சற்றே மகிழ்ச்சியடைந்த தந்தை மொகமது ரஹிமுதீன், "எனது மகன் போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால் வாழ்க்கை அவனை வேறு ஒன்றிற்கு காத்திருக்கச் செய்துள்ளது" என்றார்.

"மரணத்தை எதிர்நோக்கும் சிறுவனின் கனவை நிறைவேற்ற முடிந்தது எங்களுக்கு மன நிறைவை அளிக்கிறது" என்று கமிஷனர் மகேந்தர் ரெட்டி தெரிவித்தார்.

No comments: