Tuesday, March 8, 2011

08.03.2011 - சர்வதேச மகளிர் தினத்தின் தொனிப்பொருள் (சிறப்புக் கட்டுரை)

ஒவ்வொரு வருடமும் மார்ச் 8 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இது வெறுமனே ஒரேயொரு தினக் கொண்டாட்டமாக அமையாமல், மார்ச் மாதம் முழுக்க அரசியல், பொருளாதாரம், சமூகம், கலை, கலாசாரம் முதலான இன்னோரன்ன துறைகளில் பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றங்களை, சாதனைகளை அடையாளப்படுத்தும் நூற்றுக்கணக்கான நிகழ்வுகளைக் கொண்டு அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய ரீதியில் உள்ள அரசாங்கங்கள், அமைப்புக்கள், மகளிர் குழுக்கள் என்பன வருடந்தோறும் பல்வேறுபட்ட தொனிப் பொருள்களைத் தமது மகளிர் தினக் கொண்டாட்டத்துக்கான அடிப்படையாக அமைத்துக்கொண்டு அதற்கேற்பத் தமது நிகழ்ச்சித் திட்டங்களை வடிவமைப்பது வழக்கம். அந்த வகையில், ஐ.நா.வின் சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்துக்கான தொனிப் பொருள்கள் எவை என்று நோக்குவோம்:
ஐ.நா. சபையினால் 1975 ஆம் ஆண்டு முதன் முதலாக சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அதன்பின் வருடாந்தம் மகளிர் தினக் கொண்டாட்டத்தின் பொருட்டுப் பல்வேறு தொனிப் பொருள்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. எனின், 1996 ஆம் ஆண்டு முதல் நிகழும் 2011 ஆம் ஆண்டு வரையான தொனிப்பொருள்கள் குறித்து சுருக்கமாகக் கீழே தருகிறோம்:
- 2011: மகளிருக்குக் கண்ணியமான தொழில்வாய்ப்பைப் பெறும் வழியை அமைக்குமுகமாக அறிவியல், தொழினுட்பம் மற்றும் கல்வி, பயிற்சி என்பவற்றைப் பெறுவதில் சமவாய்ப்பு.
- 2010: அனைவரின் முன்னேற்றத்தையும் உத்தேசித்துப் பெண்களுக்குச் சம உரிமையும் சமவாய்ப்பும்.
- 2009: பெண்கள், சிறுமியருக்கு எதிரான வன்முறைகளை ஒழித்துக்கட்டும் வகையில் ஆண்களும் பெண்களும் இணைந்து போராடுதல் வேண்டும்.
- 2008: பெண்கள், சிறுமியருக்காக முதலீடு செய்தல்.
- 2007: பெண்களுக்கும் சிறுமியருக்கும் எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோர் தண்டனை பெறுவது உறுதிசெய்யப்படுதல் வேண்டும்.  
- 2006:  தீர்மானம் எடுப்பவர்களாகப் பெண்கள் இருத்தல் வேண்டும்.
- 2005: பால்நிலைச் சமத்துவம்- பாதுகாப்பானதோர் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புதல்.
- 2004: மகளிரும் எச்.ஐ.வி. எயிட்ஸும்.
- 2003: பால்நிலைச் சமத்துவமும் மில்லேனிய அபிவிருத்தி இலக்குகளும்.
- 2002: இன்றைய ஆப்கானியப் பெண்கள்: வாய்ப்புக்களும் யதார்த்தங்களும்.
- 2001: மகளிரும் சமாதானமும்: முரண்பாடுகளைக் கையாளுவதில் பெண்கள்.
- 2000: சமாதானத்துக்காக மகளிர் ஒருங்கிணைதல்.
- 1999: பெண்களுக்கெதிரான வன்முறைகள் அற்ற உலகை நோக்கி...
- 1998: மகளிரும் மனித உரிமைகளும்.
- 1997: சமாதானப் பேச்சவார்த்தைகளில் மகளிர்.
- 1996: கடந்த காலத்தைக் கொண்டாடி, எதிர்காலத்துக்காகத் திட்டமிடுவோம்!
வருடந்தோறும் வித்தியாசமான தொனிப் பொருள்களில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்ற போதிலும் உலகெங்கிலும் உள்ள பெண்களும் சிறுமியரும் அன்றாடம் அனுபவித்துவரும் இன்னல்கள் குறைந்துள்ளனவா என்றால் அதற்கான பதில் இல்லை என்பதுதான்.
பெண்கள் வீட்டுக்குள்ளும் வீட்டுக்கு வெளியிலும் எதிர்கொண்டு வரும் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேவேளை, சமூக தளத்தில் பெண் என்பவள் ஆத்மாவும் இதயமும் கொண்ட மனித உயிரியாக நோக்கப்படும் நிலைமைக்கு அப்பால், பெண்ணுடைய உடலும் அழகும் விற்பனைப் பொருளாகவும் விளம்பர சாதனமாகவும் நோக்கப்படும் இழிநிலையும் வாகனத்தின் டயர் விளம்பரத்திலும், ஆண்களின் உள்ளாடைக்கான விளம்பரத்திலும் அரைகுறை ஆடையுடன் பெண்கள் இடம்பெறுவதும் சர்வசாதாரணமாகி விட்டது. எனவே, 'பெண்'ணின் ஆளுமை, அவளின் உணர்வுகள், விருப்பு வெறுப்புக்கள் குறித்து அலட்டிக்கொள்ளப்படாத நிலையே முதலாளித்துவ உலகில் காணப்படுகின்றது.
பெண்கள் உயர்கல்வி கற்று வேலைபார்த்துத் தம் சொந்தக் காலில் நிற்குமளவு முன்னேறிவிட்டனர் என்று சொல்லப்படுகின்றது. எனினும், பெண்ணுடைய உழைப்பும் உழைப்புக்கான கூலியும் பெருமளவு சுரண்டலுக்கு உட்படுகின்றன என்ற உண்மை பெரும்பாலும் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றது. வீட்டிலும் வெளியிலுமாய் சுமார் 15 மணிநேரம் வேலை செய்வதன் மூலம் பெண் இரட்டைச் சுமையுடையவளாய் சிரமப்படுகின்றாள். பொருளாதார ரீதியாகக் கணவனுக்கோ தந்தை, சகோதரருக்கோ தோள்கொடுத்து வருகின்ற போதிலும் வீட்டு வேலைகளை அவள் பெரும்பாலும் தனியே செய்துகொள்ளவேண்டி இருக்கின்றது. அவள் பெறும் சம்பளம்கூட அவளுடைய விருப்பப்படி செலவு செய்யப்படுகின்றதா என்ற கேள்வியும்கூட இங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகின்றது.
திருமணச் சந்தையைப் பொறுத்த வரையில் பெண்ணுடைய நிலை இரண்டாம் பட்சமானதாக இருந்துவரும் அல்லது அவள் விளிம்புநிலையில் வைத்து நோக்கப்படும் நிலை இன்னும் தொடர்ந்து வருவது கசப்பான உண்மையாகும். சீதனக் கொடுமை தலைவிரித்தாடுவது ஒருபுறம்.  மறுபுறம் அவளுடைய எதிர்பார்ப்புகள் இரண்டாம் அல்லது மூன்றாம் பட்சமானதாக இருக்க, மணமகன் மற்றும் மணமகன் வீட்டாரின் எதிர்பார்ப்புக்களும் பேரங்களுமே முதனிலைப்படுத்தப்படும் பாரம்பரியம் இன்றும் இலங்கை, இந்தியா, வங்காளம், பாகிஸ்தான் முதலான தென்கிழக்காசிய நாடுகளில் நிலவிவருகின்றமை நோக்கத்தக்கது.
இத்தகைய அவல நிலை மாறவேண்டும் என்றால், சமூக உருவாக்கத்தில் பெண்ணுடைய பங்களிப்பின் முக்கியத்துவம் ஆழமாக உணர்ந்து உணர்த்தப்பட வேண்டும். பெண் என்பவள் வேலைசெய்யும் தாதியாகவும் குழந்தைபெறும் யந்திரமாகவும் மட்டும் நோக்கப்படும் மனப்பாங்கு மாற்றியமைக்கப்பட வேண்டும். பெண்கல்வி மேம்படுத்தப்படல் வேண்டும். பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்பான சட்டங்கள் சீர்திருத்தப்பட்டு, தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். அதுமட்டுமல்ல, பெண்கள் விளம்பரப் பண்டமாக, கலை இலக்கிய ஊடகங்களில் ஆபாசத்தின் சின்னமாகக் காட்டப்படும் இழிநிலை மாற்றியமைக்கப்பட வேண்டும். மொழிவழக்கில் பெண் இழிவானவளாகச் சித்திரிக்கப்படும் வழக்குகள், பழமொழிகள் என்பன நீக்கப்படுதல் வேண்டும். அதுமட்டுமல்ல, கவர்ச்சிகாட்டுவதுதான் பெருமை, சிறப்பு என்று இளம் பெண்களிடையே மூளைச் சலவை செய்யப்படுவது சட்டரீதியாகத் தடைசெய்யப்பட வேண்டும். இது தொடர்பான விழிப்புணர்வு முதலில் பெண்கள் மத்தியில் பரவலாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
கனவுத் தொழிற்சாலை என்று அழைக்கப்படும் சினிமாத் தொழில் பெண்களின் இழிநிலைக்கு மிகப்பெரும் காரணமாய் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. அண்மையில் இந்தியாவிலே ஏழுவயதுச் சிறுமி ஒருத்தி கொலைசெய்யப்பட்டு மிகமோசமாக வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட பின் தீவைத்துக் கொளுத்தப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்ட கொடூரக் காமுகன், தான் கௌதம் மேனனின் 'நடுநிசி நாய்கள்' என்ற திரைப்படத்தைப் பார்த்து வெறிகொண்டதாலேயே அவ்வாறு செய்ததாக வாக்குமூலம் அளித்திருப்பது இங்கு கவனிக்கத் தக்கது. அந்த வகையில் சினிமாவில் பெண்கள், சிறுமியர் தொடர்பான நோக்குநிலையும், வரையறைகளும் சீராக்கப்பட வேண்டும். சட்டத்துறையின் பங்களிப்பும் தலையீடும் இதில் மிக இன்றியமையாதது. கலை என்பது சமுதாய மேம்பாட்டுக்குப் பங்களிப்புச் செய்ய வேண்டுமே தவிர அதனைச் சீரழிப்பதற்கு வழியமைக்கக் கூடாது என்பதில் அரசியல் துறையும் நீதித்துறையும் கண்டிப்பான நெறிமுறைகளை வகுத்து அமுல்நடாத்த வேண்டும்.
இறுதியாக, ஆண்களும் பெண்களும் இணைந்ததுதான் சமுதாயம். அதில் இருபாலாருடைய காத்திரமான பங்களிப்பும் இன்றியமையாதது. பெண் என்பதாலேயே அவள் இரண்டாம் பாலினமாக நோக்கப்படும் கருத்துநிலை படிப்படியாக மாற்றப்படும்போது, பெண்களின் நிலைமை மேம்பாடு அடையும் என்பதில் ஐயமில்லை. பெண்களுக்கெதிரான வன்முறைகள் அற்ற, பெண்களும் சிறப்பானதொரு மனித உயிரியாக மதிக்கப்படும் புதியதோர் உலகை உருவாக்குவதில் நாமும் நம்முடைய கரங்களை இணைத்துக் கொள்வோம்! ஒற்றுமையின் பலத்தினால் வெல்வோம்!
- ஆக்கம்: லறீனா அப்துல் ஹக் (இலங்கை)

No comments: