Tuesday, February 8, 2011

பறவைகளின் மூளை அளவு குறைவு

செர்னோபில் அணு உலை விபத்து ஏற்பட்ட இடத்தில் காணப்படும் பறவைகளின் மூளை அளவானது 5 சதவீதம் வரையில் குறைவாக இருப்பது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
இந்த பகுதியில் காணப்பட்ட சுமார் 48 இனங்களை சேர்ந்த 550 வகையான பறவைகளிடம் செய்யப்பட்ட ஆராய்ச்சியில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
இந்த செய்தி பிளோஸ் ஒன் என்ற சஞ்சிகையில் வெளிவந்துள்ளது.
நார்வே, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
கடந்த 1986 ஆம் ஆண்டு செர்னோபில் அணு ஆலையின் நான்காவது உலை வெடித்து சிதறியது.
இதனை தொடர்ந்து வடக்கு துருவத்தில் இருக்கும் பெரும்பாலான நாடுகளில் கதிர்வீச்சின் தாக்கங்கள் காணப்பட்டன.
விபத்து ஏற்பட்ட பகுதியை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்தனர். எனினும் கதிர் வீச்சின் தாக்கம் இந்த பகுதியில் உள்ள உயிரினங்களை எவ்வாறு பாதித்துள்ளது என்பது குறித்து அறிய ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த பகுதிக்கு செல்ல அனுமதி கொடுக்கப்பட்டது.
இங்கு நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் உயிரினங்களின் வகைகள் வெகுவாக குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. அதே போன்று கதிர் வீச்சு உயிரினங்களை எவ்வாறு பாதித்துள்ளது என்பதை அறிய உயிரினங்களின் மரபணுக்கள் சோதனை செய்யப்பட்டது.
இந்த ஆராய்ச்சியில் தான் பறவைகளின் மூளைகள் கிட்டதட்ட 5 சதவீதம் வரை குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.
பல பறவைகள் முட்டையாக இருக்கும் கட்டத்தில் அழிந்துள்ளன.
பறவைகள் கடுமையான சூழ்நிலைக்கு உள்ளாகும் போது தங்களுடைய உடல் பாகங்களை சுருக்கி கொள்வது இயல்பு. உதாரணமாக நெடுந்தூரம் பறக்கும் பறவைகள் சக்தியை சேமிப்பதற்காக தங்கள் உடலின் பாகங்களை சுருக்கி கொள்வது இயல்பு.
ஆனால் மூளையை சுருக்குவது என்பது ஒரு புதிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
இது கதிர்வீச்சினால் ஏற்பட்டுள்ளது என்பது உறுதியாக தெரிந்தால், பறவையின் மற்ற உடல் பாகங்களிலும் மாற்றம் ஏற்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் எண்ணுகின்றனர்.

No comments: