Tuesday, February 22, 2011

தமிழக எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் அதிர்ச்சி

தமிழக எம்.பி.,க்களில் 11 பேர் மீதும், எம்.எல்.ஏ.,க்களில் 76 பேர் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதில் ஏழு எம்.பி.,க்கள், 25 எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகள் கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட கடுமையான குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்டவை. மேலும் 36 எம்.பி.,க்கள், 54 எம்.எல்.ஏ.,க்கள் கோடீஸ்வரர்கள்.

"நேஷனல் எலக்ஷன் வாட்ச்' மற்றும் "அசோசியேஷன் ஆப் டெமாகிரடிக் ரிபார்ம்ஸ்' ஆகிய அமைப்புகள், தமிழக எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மீதான கிரிமினல் வழக்குகள் மற்றும் சொத்து விவரங்களை தொகுத்து வெளியிட்டுள்ளது. அவை பல அதிர்ச்சியளிக்கும் உண்மைகளை வெளிப்படுத்துபவையாக உள்ளன.

தமிழகத்தைச் சேர்ந்த 39 லோக்சபா எம்.பி.,க்களில் 10 பேர் மீது கிரிமினல் வழக்குகள்(ஆறு எம்.பி.,க்கள் மீது கடுமையான வழக்குகள்) உள்ளன. தி.மு.க., எம்.பி.,க்கள் 18 பேரில் நான்கு பேர் மீது கிரிமினல் வழக்கும், ஒருவர் மீது கடுமையான வழக்கும், அ.தி.மு.க., எம்.பி.,க்கள் ஒன்பது பேரில் நான்கு பேர் மீது கடுமையான கிரிமினல் வழக்கும், ம.தி.மு.க.,வின் ஒரு எம்.பி.,யின் மீது கிரிமினல் வழக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒரு எம்.பி., மீது கடுமையான கிரிமினல் வழக்கும் உள்ளன.

தமிழகத்தைச் சேர்ந்த 18 ராஜ்யசபா எம்.பி.,க்களில், தி.மு.க.,வின் செல்வகணபதி மீது மட்டும் கடுமையான கிரிமினல் வழக்கு உள்ளது. தமிழக எம்.எல்.ஏ.,க் களில் 76 பேர் மீது கிரிமினல் வழக்கும், 25 பேர் மீது கடுமையான கிரிமினல் வழக்கும் உள்ளன. விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள கேரளா, தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில், தமிழகத்தில் தான் அதிக எம்.எல்.ஏ.,க்கள் மீது கிரிமினல் வழக்கு உள்ளது. அதிக கிரிமினல் வழக்கு உள்ள எம்.எல்.ஏ.,க்கள் பட்டியலில் வில்லிவாக்கம் ரங்கநாதன், மேட்டூர் ஜி.கே.மணி ஆகியோர் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளனர்.

சமீபத்தில் சென்னை ஐ.ஐ.டி.,யில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி, "ஒரு கட்சி கிரிமினலை வேட்பாளராக நிறுத்தும் போது, மற்ற கட்சிகளைச் சேர்ந்த சாதாரண ஆட்கள் அந்த கிரிமினலை எதிர்த்து தேர்தலில் போட்டியிட தயங்குகின்றனர். இதனால், மற்ற கட்சிகளும் கிரிமினல்களை வேட்பாளர்களாக நிறுத்துகின்றனர்' என வேதனை தெரிவித்தார். தமிழக லோக்சபா எம்.பி.,க்களின் சராசரி சொத்து மதிப்பு 4 கோடியே 71 லட்சம் ரூபாய். இதில், காங்கிரஸ் எம்.பி.,க்களின் சராசரி சொத்து மதிப்பு 7 கோடியே 95 லட்சம் ரூபாய். தி.மு.க., எம்.பி.,க்களின் சராசரி சொத்து மதிப்பு 5 கோடியே 3 லட்சம் ரூபாய். அ.தி.மு.க., எம்.பி.,க்களின் சராசரி சொத்து மதிப்பு 2 கோடியே 92 லட்சம் ரூபாய். ம.தி.மு.க., எம்.பி., சொத்து மதிப்பு 2 கோடியே 67 லட்சம் ரூபாய். தமிழக லோக்சபா எம்.பி.,க்களில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை, 2004ம் ஆண்டு 14 எம்.பி.,க்களில் இருந்து, 2009ம் ஆண்டு 25 எம்.பி.,க்களாக உயர்ந்துள்ளது. அதிக சொத்துக்கள் உடைய லோக்சபா எம்.பி.,க் கள் பட்டியலில், சிவகங்கை சிதம்பரம், தேனி ஆருண், மதுரை அழகிரி, பெரம்பலூர் நெப்போலியன், ராமநாதபுரம் சிவகுமார் ஆகியோர் முதல் ஐந்து இடங்களில் உள்ளனர். தமிழக ராஜ்யசபா எம்.பி.,க்களின் சராசரி சொத்து மதிப்பு 2 கோடியே 36 லட்சம் ரூபாய். ராஜ்யசபா எம்.பி.,க்களில் 11 பேர் கோடீஸ்வரர்கள். அதிக சொத்துக்கள் உடைய ராஜ்யசபா எம்.பி.,க்கள் பட்டியலில், கனிமொழி, ஜெயந்தி நடராஜன், செல்வகணபதி, ராமலிங்கம், வாசன் ஆகியோர் முதல் ஐந்து இடங்களில் உள்ளனர்.

சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள ஐந்து மாநில எம்.எல்.ஏ.,க்களின் சொத்து விஷயத்திலும், தமிழகமே முதலிடம் வகிக்கிறது. தமிழக எம்.எல்.ஏ.,க்களில் 54 பேர் (24 சதவீதம்) கோடீஸ்வரர்கள். இந்த பட்டியலில், முதல்வர் கருணாநிதியும், ஸ்ரீவைகுண்டம் செல்வராஜும் முதல் இரண்டு இடத்தைப் பிடித்துள்ளனர். இவ்வளவு கோடீஸ்வரர்கள் தேர்தலில் போட்டியிடுவதும், ஓட்டுக்கு பணம் கொடுப்பது உட்பட தண்ணீராக பணத்தைச் செலவு செய்து தேர்தலில் வெற்றி பெறுவதும் தங்களை வருத்திக் கொண்டு மக்கள் சேவை செய்யவே என நம்புவோம். தமிழகத்தைச் சேர்ந்த 39 லோக்சபா எம்.பி.,க்களில் இருவர் மட்டுமே பெண்கள்; 18 ராஜ்யசபா எம்.பி.,க்களில் மூவர் மட்டுமே பெண்கள். தமிழக எம்.எல்.ஏ.,க் களில் 212 பேர் ஆண்கள்; 22 பேர் மட்டுமே பெண்கள் (9 சதவீதம்). பெண்கள் முன்னேற்றம் பற்றி பேசும் தமிழக அரசியல் கட்சிகள், பார்லிமென்ட், சட்டசபையில் பெண்களுக்கு அளிக்கும் முக்கியத்துவம் இவ்வளவு தான்.

Source: Dinamlar
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=191393

No comments: