Monday, January 17, 2011

உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது; பிடிக்க முயன்ற வீரர்களை பந்தாடிய முரட்டுக்காளைகள்



அலங்காநல்லூர், ஜன. 17-
 
உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டு இன்று காலை தொடங்கியது. இதில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு மாடுகளை பிடித்தனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்ற தாகும்.
 
ஜல்லிக்கட்டில் பங்கேற்க மதுரை, தஞ்சாவூர், திருச்சி, நெல்லை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட காளைகள் நேற்று இரவே அலங்காநல்லூருக்கு லாரி மற்றும் வேன்கள் மூலம் கொண்டுவரப்பட்டன. ஜல்லிக்கட்டில் பங்கு பெற 300- க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்து இருந்தனர்.
 
முன் பதிவு செய்த மாடுபிடி வீரர்களுக்கு இன்று காலை அரசு மருத்துவர் வளர்மதி தலைமையில் 20- க்கும் மேற்பட்ட டாக்டர்கள் குழுவினர் மது அருந்தி உள்ளார்களா?  என மருத்துவ பரிசோதனை செய்தனர். மேலும் 30- க்கும் மேற்பட்ட டாக்டர் குழுவினர் மாடுகளுக்கு பரிசோதனை செய்தனர். அலங்காநல்லூர் கோட்டை முனியசாமி திடல் முன்பு அமைக்கப்பட்டிருந்த வாடிவாசல் முன்பு காலை 10.35 மணிக்கு கலெக்டர் காமராஜ், மூர்த்தி எம்.எல்.ஏ. ஆகியோர் ஜல்லிக்கட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
 
முதலில் வாடிவாசலில் முனியாண்டி சாமி கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. கோவில் காளை என்பதால் மாடுபிடி வீரர்கள் அதனை பிடிக்கவில்லை. பின்னர் பதிவு செய்யப்பட்ட காளைகள் வாடி வாசல் வழியாக சீறி பாய்ந்தன.
 
அதனை அடக்க மாடுபிடி வீரர்கள் கடுமையாக போராடினர். ஆனால் அதையும் மீறி முரட்டுக்காளைகள் ஓடின. இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு தங்கம், வெள்ளி காசு மற்றும் பீரோ, சைக்கிள்கள் பரிசாக வழங்கப்பட்டன. பிடி படாத மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
 
ஜல்லிக்கட்டில் காய மடைந்த 50- க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு அலங்காநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ஜல்லிக்கட்டை பார்க்க பெல்ஜியம், ஜப்பான் உள்பட பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வந்திருந்தனர்.
 
இந்த ஜல்லிக் கட்டை சுமார் ஒரு லட்சம் பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
 
குடிநீர் வசதிக்கான ஏற்பாடுகளை அலங்கா நல்லூர் பேரூராட்சி தலைவர் அழகுஉமாதேவி பெரிய சாமி, துணைத்தலைவர் செல்வராணி, நிர்வாக அதிகாரி உமாகாந்தன் ஆகியோர் செய்து இருந்தனர்.

No comments: