Tuesday, January 11, 2011

விக்கிலீக்ஸ் வேண்டுமென உருவாக்கப்பட்ட பரபரப்பா, இல்லை பாவமன்னிப்பா..?

குறுகிய காலத்தில் மிகப்பிரபல்யமான இணையத்தளம் விக்கிலீக்ஸ். இதில் வெளியிடப்பட்ட செய்திகள் பலரை அசர வைத்தது.
பலர் ஊடகவியாலாளர்களின்  வேலைகளையும்,  இணையத்தளங்களை நெறிப்படுத்தும் பலரின் வேலைகளை சுலபமாக்கியது. மறுபுறத்தில் அய்யகோ நாட்டின் பாதுகாப்பு இணைப்பு வலையில் ஒற்றர்கள் புகுந்து விட்டார்கள், இராணு இரகசியங்கள் அந்நியர் கைகளில் சிக்கி விட்டது என குரல் எழுப்பபட்டது.
ஒன்றுக்கு பத்து உளவு நிறுவனங்களையும் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளில்  யுத்ததை நிகழ்த்திக் கொண்டிருக்கும் வல்லரசிற்கு தன் நாட்டின் உளவுத்துறையிலேய உள்ள ஓட்டைகள் தெரியாமல் போயிருக்கும் என்று நாம் நம்ப வேண்டும் போல எழுகிறது அந்தக் குரல்.
உண்மையிலேயே விக்கிலீக்சின் அசாதாரண திறமையின் வெளிப்பாடா  கசியவிடப்படும் இந்தத் தகவல்கள். எதனையும் கேள்விக்குள்ளாக்காத வரை  உண்மை நிலை நிலை உணரமுடியாதே?. அந்த வகையில் விக்கிலீக்ஸும் ஏலவே கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. இருந்த போதும் அது தொடர்பான சந்தேகங்கள் தொடர்ந்த வரவும் செய்கின்றன.
விக்கிலீக்ஸ் மூலம் வெளிவந்திருக்கும் தகவல்கள் மூன்று கட்டங்களாக வெளிவந்துள்ளன. ஒவ்வொரு தடவையும் அமெரிக்க இராணுவம் தொடர்பாகவும், அமெரிக்கா யுத்தம் நடாத்திக் கொண்டிருக்கும் நாடுகளில் அமெரிக்க இராணுவம் மேற் கொள்ளும் இராணுவ தந்திரோபாயங்கள் தொடர்பான விடயங்கள் தெரியவந்தன. முதல் முதலாக வெளியிடப்பட்ட தகவல்கள்  ஆப்கான் தொடர்பாகவும் அடுத்து ஈராக் யுத்தம் தொடர்பாகவும் மற்றும் ஈரான் தொடர்பாக அமெரிக்கா கடைப்பிடிக்கும் கொள்கைகள் தொடர்பானவையாகவும் அமைந்திருந்தன.
இறுதியாக வெளிவந்தவை பொது மக்களின் பார்வைக்கு உலகிலுள்ள பெரும்பாலான நாடுகள் பற்றிய விடயங்களாகத் தென்பட்ட போதிலும்  உள்ளடக்கத்தை பார்ப்போமானால்  இதில்  ஈரான் தொடர்பான விடயங்கள் முக்கியத்துவம் பெறுவதை அரசியல் கண்ணோட்டம் கொண்ட யாவருக்கும் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான இராஜதந்திர உறவுகள் முறிவுக்கு வந்து சுமார் முப்பது ஆண்டுகளுக்கு மேலாகின்றன என்பது எமக்கு நன்கு தெரியும். ஆனால் அமெரிக்கா இந்த நாட்டின் மீது தனது பார்வையை அகற்றவில்லை என்பதை அமெரிக்கா அதன் அயல் நாடுகளிலும் அந்தப்பிராந்தியத்திலும் மேற்கொள்ளும் இராஜதந்திர உறவுகளைப் பார்க்கும் போது புரிந்து கொள்ள முடியும்.
செய்திகள் என்பவை அந்தக் கணங்களில் வாழ்பவை.  பரபரப்பினையும்,  அதிர்ச்சியையும், தளத்திற்கு வந்து செல்லும் வாசகர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வைப்பவை. இந்த வகையில் இவை அற்ப ஆயுளைக் கொண்டவை. இங்கு கசிய விடப்பட்ட விடயங்கள் ஒரு வகையில் பார்க்கும் போது காலம் கடந்த தகவல்கள். இவற்றை இன்னும் சில மாத காலங்களில் அமெரிக்கா இராணுவ வலைத்தளங்களே எங்கோ ஒரு மூலையில் சத்தம் போடாமல் பிரசுரிக்க கூடியவையாகவே தெரிகின்றன.
சென்ற ஆண்டு  பாராக் ஒபாமா ஆப்கானிஸ்தான் மீதான யுத்த்தில் புதிய தந்திரோபாயத்தைக் கடைப்பிடித்திருந்தார். முதல் தடவையாக வெளிவந்த கசிவுகள்  அமெரிக்கா முகம் கொடுக்கும் சவால்கள் தொடர்பானவையாக இருந்தது. அதன்பின்பு அமெரிக்க காங்கிரஸ் வரலாறு காணாத கடினமாக வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாத்திற்கு முகம் கொடுத்துக் கொண்டிருந்தது.
இந்த  வரவு செலவு திட்டத்தில் யுத்திற்கான செலவீனங்களை ஒதுக்குவது தொடர்பாக பலரின் அதிருப்தியைச் சம்பாதித்திருந்து. இந்த நிலையில் விக்கிலீக்சின் விபரங்கள் அமெரிக்க மக்களையும் அமெரிக்காவின் ஆதிக்கத்தை எதிர்ப்போருக்கும்,  உண்மையிலேயே அமெரிக்காவிற்கு  பல எதிரிகள் இருக்கிறார்களோ என்ற   அநுதாபதக் கண்ணோட்டத்தை செலுத்த உதவி இருக்கலாம்.
கசியவிடப்பட்ட ஒரு தகவலைப் பார்ப்போம்.  அமெரிக்க நட்புறவு நாடான சவுதி அரேபியா  ஈரானை தாக்கும்படி அமெரிக்காவை கோருவது தொடர்பானது. அத்தோடு சவுதி அரேபியா இஸ்ரேல் தனது வான் பரப்பில் பறந்து ஈரான் மீது குண்டுகளைக் கொட்டுவதற்கு முழு ஆதரவையும் வழங்கும் என்பதெல்லாம் அரசியல் அவதானிகளுக்கு ஒன்றும் புதிய விடயமல்லவே.
விக்கிலீக்கிஸினால் வெளிக் கொணரப்பட்டிருக்கும் தகவல்கள் ஒரு வகையில் கடந்த கால இராணுவ மற்றும் ஏனைய பல குளறுபடிகளுக்கு ஒபாமா அரசாங்கம் பொறுப்பல்ல என கோடி காட்டுவது போலவும் தென்படுகிறது. அந்த வகையில் இது ஒரு பாவ மன்னிப்பு ஒப்புதலோ என்றும் நோக்கப்படுகிறது.
இங்கு நாம் இன்னொரு விடயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் விக்கிஸீக்ஸ் மூலம் தகவல்கள் கசியவிடப்படுவதில் அமெரிக்க பின்புலத்தில் இருக்கலாம் என ஈராக் குற்றஞ்சாட்டியுள்ளது. தகவல்கள் கசியவிடப்பட்ட காலம் மற்றும் கசியவிடப்பட்ட விடயங்கள் மற்றும்  படிநிலைகளைப் பார்க்கும் போது ஈரானின் குற்றச்சாட்டுக்கு வலுவான காரணங்கள் இருப்பது போலத் தோன்றுகிறது.
ஐரோப்பிய சுதந்திர ஊடகவியலாளர் ஒருவரோடு பேசுகையில், ' தன் மீதான உலகின் கவனத்தை, மற்றொரு பக்கத்திற்கு திசை திருப்பிவிடும் அமெரிக்காவின் திட்டமிட்ட நாடகமாகவும் இது இருக்கலாம். இந்தப் பரபரப்புக்களில் உலகம் புதைந்து கொண்டிருக்கையில், வேறு ஓரு முனையில் புதிய நடவடிக்கை ஒன்றை அது ஆரம்பித்தும் இருக்கலாம்' என்றார்.
ஆம் அப்படிக் கூட இருக்கலாம். ஆனால் அதை நாம் தெளிவாக உணர்ந்து கொள்வதற்கு இன்னமும் சிலகாலம் தேவைப்படலாம்...

No comments: