Thursday, April 7, 2011

நம்மூரில் சில நல்ல முதல்வர்களும் உள்ளார்கள்!

பொட்டல் காட்டைக் கூட, பொன் விளையும் பூமியாக மாற்றும் வல்லமை மிக்கவர்கள், ஜப்பானியர்கள். 1945ல், அமெரிக்கர்கள் வீசிய அணுகுண்டுகளுக்கு, ஜப்பானின் தொழில் நகரங்களான ஹிரோஷிமாவும், நாகசாகியும் நாசமாகின. "இனிமேல் அங்கு புல், பூண்டு கூட முளைக்காது' என்றனர் வல்லுனர்கள். ஆனால், சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை போல், அகில உலகமும் அதிசயிக்கும் அளவுக்கு சாதித்துக் காட்டினர் ஜப்பான் அரசியல்வாதிகள்.
அயராத உழைப்பு, வளர்ச்சி திட்டங்கள் மூலம், 1994ல், அதே ஹிரோஷிமாவில் ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்தி, தங்களை நிரூபித்துக் காட்டினார். இது ஜப்பான் அரசியல் தலைமையின் திறமைக்கு மிகப் பெரிய சான்றாக அமைந்தது.
நம் நாட்டிலும், 1964ல் ஓர் அசம்பாவிதம் நடந்தது. தமிழகத்தின் தென்கோடியில் இருந்த தனுஷ்கோடி என்ற நகரத்தையே, ஆழிப்பேரலைகள் விழுங்கிவிட்டன. இந்தச் சம்பவம் நடந்து, 47 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. புயல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட அந்த நகரத்துக்கு, இதுவரை ஒரு தார்ச்சாலையை கூட அமைக்க முடியவில்லை, நம்மூர் அரசியல் தலைமைகளின் திறமையின்மைக்கு, இதை விட ஓர் உதாரணம் தேவையில்லை.
இருந்தாலும், சேற்றிலும் சில செந்தாமரைகள் முளைக்கும் அல்லவா? அதுபோல், நம் நாட்டிலும் சில அரசியல்வாதிகள், தங்கள் நிர்வாகத் திறமையால், பல காலமாக புரையோடிப் போயிருந்த வறுமை, ஊழல், வன்முறை போன்றவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்து, வளர்ச்சித் திட்டங்களை அசுர வேகத்தில் நிறைவேற்றி, இலவசங்கள் இல்லாமல் சாதித்துக் காட்டியுள்ளனர். சில குறைகள் இருந்தாலும் சாதனைகள் பாராட்டத்தக்கவை.

ஷீலா தீட்சித் (காங்.,) டில்லி : தொடர்ந்து மூன்றாவது முறையாக டில்லி மாநிலத்தில் முதல்வர் நாற்காலியை அலங்கரித்துக்கொண்டிருக்கும் சாதனைப் பெண்மணி தான், ஷீலா தீட்சித். குடிசைகளின் நகரமாக இருந்த டில்லியை, சர்வதேச நகரமாக உயர்த்திக் காட்டியவர். கட்சிக்குள்ளேயே அதிருப்தியாளர்கள் இருந்தும், அதையும் தாண்டிய உயரத்துக்கு தன்னையும், தலைநகரையும் கொண்டு வந்தவர். அரசு நிர்வாகத்தில் வெளிப்படையான அணுகுமுறையை அமல்படுத்தியதற்காக, ஐ.நா., சபையின் விருதைப் பெற்றவர்.
இவரது ஆட்சிக் காலத்தில், மெட்ரோ ரயில், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத அரசு போக்குவரத்து திட்டங்கள், மின் துறை சீர்திருத்தம், சுகாதார திட்டங்களில் கட்டமைப்பு மேம்பாடு என, டில்லி மாநிலம் அசுர கதியில் வளர்ச்சி அடைந்து வருகிறது. காமன்வெல்த் போட்டிகளில் நடந்த முறைகேடுகளில், இவரது பெயரும் அடிபட்டாலும், டில்லியின் பெருமையை சர்வதேச நாடுகளுக்கு உணர வைத்த பெருமை ஷீலாவையே சேரும்.

சிவ்ராஜ்சிங் சவுகான் (பா.ஜ.,), மத்திய பிரதேசம் : கடந்த, 2005ல் இருந்து, தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வர் பதவி வகித்துவருகிறார், சிவ்ராஜ் சிங் சவுகான். அந்த மாநிலத்தில், காங்கிரஸ் அல்லாத எந்தக் கட்சியைச் சேர்ந்தவரும், தொடர்ந்து ஐந்தாண்டுகள் கூட முதல்வராக இருந்தது இல்லை. அந்த தடையை வெற்றிகரமாக தகர்த்துக் காட்டிய முதல் முதல்வர், சவுகான். இவரின் நிர்வாகத் திறமையும், "இவர் நம்மில் ஒருவர்' என்ற சாமானிய மக்களின் நம்பிக்கையும் தான், இதற்கு காரணம்.
அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதி, ஏழைகளுக்கான சுகாதாரம் மற்றும் கல்வி என, அனைத்து துறைகளிலும், ம.பி., மதிப்பு மிக்கதாகி வருகிறது. பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய மாநிலமாக இருந்து, தற்போது வளர்ந்த மாநிலங்களுக்கு சவாலாக விளங்குகிறது. மத்திய பிரதேசத்தின் கடந்தாண்டு பொருளாதார வளர்ச்சி விகிதம், 8.6 சதவீதம். தனி நபர் வருவாய், 15 ஆயிரத்து 929ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஐந்தாண்டுகளில் மாநிலத்தின் வருவாய், 6,000 கோடி ரூபாயில் இருந்து, 18 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கட்டமைப்பு வசதிகள் பலப்படுத்தப்பட்டதால், தற்போது முதலீட்டாளர்கள் குவியும் மாநிலமாக ம.பி., மாறியுள்ளது. 2001-02ல் வெறும், 2,000 மெகாவாட்டாக இருந்த மின்சார உற்பத்தி திறன், தற்போது, 6,000 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் எந்த தொழிற்சாலை துவங்கினாலும், உள்ளூர் மக்களுக்கு, 50 சதவீத வேலை வாய்ப்பு கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

நவீன் பட்நாயக் (பி.ஜ.த.,), ஒடிசா : ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் மற்றொரு பெயர் என்ன தெரியுமா? "மிஸ்டர் கிளீன்!' அந்த அளவுக்கு, இவரின் கை சுத்தமானது. என்ற கருத்து நிலவுகிறது. 2005ல் முதல்வராக பதவியேற்றதும், "ஒடிசாவை ஊழல் இல்லாத, வெளிப்படையான அணுகுமுறை கொண்ட மாநிலமாக மாற்றுவேன்' என, உறுதி அளித்தார். சொன்னபடியே, தன் வாக்குறுதியை நிறைவேற்றிக் காட்டினார். அதற்கு பரிசாகத் தான், அம்மாநில மக்கள், இவரை மீண்டும் முதல்வராக பதவியில் அமர்த்தியுள்ளனர்.
இவரது ஆட்சிக் காலத்தில், பொருளாதார துறையில், ஆச்சர்யப்படும் வகையில் முன்னேறி வருகிறது, ஒடிசா. வெளிநாடுகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை, ஒடிசாவுக்கு கொண்டு வருவதில் ஆர்வம் காட்டி வருகிறார். நாட்டிலேயே, மிக வேகமாக பொருளாதார வளர்ச்சி அடைந்துவரும் மாநிலத்துக்கான விருதை, ஒடிசா மாநிலம் பெற்றுள்ளது. இதற்கான முழுப் பெருமையும், நவீன் பட்நாயக்கையே சேரும்.

நிதிஷ் குமார் (ஐ.ஜ.த.,), பீகார் : ஒட்டுமொத்த இந்தியாவாலும் கைவிடப்பட்ட மாநிலமாக இருந்த பீகாரின் தலையெழுத்தை ஒட்டுமொத்தமாக மாற்றிக் காட்டியவர் நிதிஷ் குமார். 2005ல், இவர் முதல்வர் பதவியில் அமர்ந்த நேரத்தில், மாநிலத்தில் ஊழல் தலைவிரித்தாடியது. அரசு அலுவலகங்களில் நுழைவதற்கே, மக்கள் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆள்கடத்தல் என்ற அலங்கோலங்கள் அன்றாட நடவடிக்கைகளாக இருந்தன. தலைநகர் பாட்னாவிலேயே, மாலை 6 மணிக்கு மேல் ஆண்கள் கூட வீதியில் நடமாட முடியாது. எப்போதாவது தான் மின்சாரம் தலைகாட்டும்.
நிதிஷ் குமார் பதவியேற்றதும், இவை அனைத்தையும் அடியோடு மாற்றினார். ஊழலை முற்றிலும் ஒழித்தார். சமூக விரோதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்தார். இவர், பதவியேற்ற முதல் ஐந்தாண்டுகளிலேயே, 54 ஆயிரம் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். 2005 மற்றும் 2008க்கு இடைப்பட்ட காலத்தில், மாநிலத்தில் நடந்த கொலைகளின் எண்ணிக்கை, வெறும், 3 சதவீதமாக குறைந்தது.
கடந்த ஐந்தாண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம், சராசரியாக, 11 சதவீதமாக இருந்தது. கடந்த ஓர் ஆண்டில் மட்டும், மாநிலம் முழுவதும், 2,400 கி.மீ., தூரத்துக்கு புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சமீபகாலமாக, தொழில் துறையிலும் பீகார் மாநிலத்தில், ஆச்சர்யப்படும் வகையிலான வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. இந்த மாற்றங்கள் அனைத்தும், நிதிஷ் குமார் என்ற தனி மனிதரின் நிர்வாக திறமைக்குச் சான்று.

நரேந்திர மோடி (பா.ஜ.,), குஜராத் : தலைசிறந்த முதல்வர்கள் பற்றி பேச வந்துவிட்டு, மோடி பற்றி பேசாமல் போனால் எப்படி? தொடர்ந்து மூன்று முறை, குஜராத்தின் முதல்வராக முடி சூடி, "ஹாட்ரிக்' அடித்தவர் நரேந்திர மோடி. இவர், முதல்வர் பதவியில் அமர்வதற்கு முன், குஜராத் பற்றி பலருக்கு தெரியாமல் இருந்தது. தன் அசாத்தியமான நிர்வாக திறமை, தொழில் துறையில் காட்டும் ஈடுபாடு ஆகியவற்றால், தொழில் துறையில் இந்தியாவின் முதன்மையான மாநிலமாக குஜராத்தை மாற்றிக் காட்டியுள்ளார். தன் முதலாவது பதவிக் காலத்திலேயே, மாநிலத்தின் மொத்த பொருளாதார வளர்ச்சி விகிதத்தை, 10 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்த்திக் காட்டியவர்.
குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் குறைத்தது, குடிநீர் மற்றும் விளைநிலங்களுக்குத் தேவையான பாசன வசதியை ஏற்படுத்தியது, அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதியை ஏற்படுத்தியது, பெண் குழந்தைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்தியது உள்ளிட்டவை, மோடியின் சாதனைகள். மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து ரத்தன் டாடாவின் நானோ கார் தயாரிப்பு தொழிற்சாலை விரட்டி அடிக்கப்பட்டபோது, சிவப்பு கம்பளம் விரித்து, அந்த தொழிற்சாலையை தன் மாநிலத்துக்கு வரவழைத்த பெருமைக்குரியவரும் இவரே. இந்தியாவிலேயே, தொழில் அதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களை அதிகம் ஈர்க்கும் மாநிலங்களில் குஜராத் தான், முன்னிலையில் உள்ளது.
பெருமூச்சு விடாதீர்கள்... நமக்கும் இதுபோன்ற முதல்வர் எப்போதாவது கிடைத்து விடுவார்!

No comments: