Monday, June 18, 2012

பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் புதிய முடிவு: 71 ஆயிரம் ஊழியர்களை வெளியேற்ற திட்டம்

நியூயார்க்:நோக்கியா, பெப்சி, சோனி, யாகூ போன்ற 12க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள், இவ்வாண்டு 71 ஆயிரம் ஊழியர்களை, பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளன.

அமெரிக்கா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் உள்ள பிரபல நிறுவனங்கள், உலகில் பல நாடுகளில் தங்களது தயாரிப்பு நிறுவனங்களை நிறுவி, அவற்றில் லட்சக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். பிரபல மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா, குளிர்பான நிறுவனமான பெப்சிகோ, மின்னணுப் பொருட்களைத் தயாரிக்கும் சோனி, கணினி துறையில் உள்ள ஹியூலட் பேக்கார்டு (எச்.பி.,), விமான நிறுவனமான லுப்தான்சா, கேமராக்கள் தயாரிப்பு நிறுவனமான ஒலிம்பஸ் உட்பட 12 நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 71 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்து அறிவித்துள்ளன.

இதில், கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் நோக்கியா நிறுவனம் அடுத்தாண்டு இறுதிக்குள் 10 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. தற்போது பெருகி வரும் பலத்த போட்டிக்கு இடையே தாக்குப்பிடிக்க முடியாத நிலை இருப்பதும், ஊழியர்களை குறைக்க இந்த நிறுவனம் முடிவெடுத்ததற்கு காரணமாகி விட்டது. ஊழியர்களை குறைப்பதன் மூலம், 200 கோடி டாலர் சேமிக்க முடியும் என்று நிறுவனம் நம்புகிறது.

அதேபோல், கேமராக்களைத் தயாரித்து விற்று வரும் பிரபல ஒலிம்பஸ் நிறுவனம் இன்னும் இரண்டாண்டுகளில் 40 ஆயிரம் ஊழியர்களை வெளியேற்றத் திட்டமிட்டுள்ளது. இதில், இம்மாதம் மட்டும் 2700 பேரை வெளியேற்றிவிட நடவடிக்கையைத் துவக்கி உள்ளது. கணினி தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான, ஹியூலட் பேக்கார்டு (எச்.பி.,) நிறுவனம் அடுத்த இரண்டாண்டுகளில் 27 ஆயிரம் ஊழியர்களை வெளியேற்றவும் முடிவு செய்துள்ளது.

இதேபோல் மேற்கண்ட ஒவ்வொரு பன்னாட்டு நிறுவனமும் கணிசமான அளவுக்கு ஊழியர்களைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளன. இன்னும் ஓராண்டில், 71 ஆயிரம் ஊழியர்கள் இந்த நிறுவனங்களின் பல்வேறு நாடுகளில் உள்ள கிளைகளில் இருந்து வெளியேற்றப்படுவர்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=488635

No comments: