Tuesday, January 19, 2010

நோபல் பரிசு 2009




உலகில் வழங்கப்படும் எத்தனையோ உயரிய விருதுகளில் மிக உன்னதமானதும் மனித மற்றும் சுற்றுப்புறச் சூழல்
மேம்பாட்டிற்காக அறிவியல் ஆராய்ச்சிகளை விஞ்ஞானத்தின் அடுத்தபடிகளுக்கு கொண்டு செல்லும் விஞ்ஞானிகளையும்,
சுற்றுபுற சூழல் மற்றும் மனிதநேய அமைதிக்காக பாடுபடும் மாமனிதர்களையும் கௌரவிக்கும் வகையில் நோபல் பரிசு
வழங்கப்படுகிறது. சர்வதேச அளவில் வழங்கப்படும் இவ்விருதை ஆல்பிரட் நோபல் எனும் விஞ்ஞானியின் பெயரால்
ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த துறையில் சாதனை படைத்தோருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

நோபல் பரிசு உருவாக்கம்

சிறந்த விஞ்ஞானியான ஆல்பிரட் நோபல் டைனமைட் என்னும் வெடிபொருளை கண்டு பிடித்தார். இதன் பயனாக
மிகுந்த செல்வமும் பெயரையும் சம்பாதித்தார். ஆக்கபூர்வமான வேலைகளுக்கு தன் கண்டுபிடிப்பை பயன்படுத்த நினைத்த
ஆல்பிரட் அழிவு செயல்களுக்கு பயன்படுவதை எண்ணி வருந்தினார். சமூக சிந்தனையாளரான நோபலுக்கு மனிதகுல
ஆக்கத்திற்கு பயன்படும் கண்டுபிடிப்புகளை செய்யும் விஞ்ஞானிகளை ஊக்குவிப்பதில் உண்டான எண்ணமே மன ஆறுதல் தந்தது.
அதனால் முதன் முறையாக 1895- ஆம் வருடம் நோபல் பரிசை உருவாக்கினார். அவர் மறைவிற்குப் பின்னர் நோபல் கமிட்டி
உருவாக்கப்பட்டு அதன்மூலம் இயற்பியல், வேதியியல், மருத்துவம் ஆகியவற்றில் சாதனை புரியும் விஞ்ஞானிகளுக்கும்,
இலக்கியம், பொருளாதாரம் போன்றவற்றில் சாதனை படைக்கும் நிபுணர்களுக்கும் உலக அமைதிக்காக பாடுபடும் தலைவர்களுக்கும்
நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

நோபல் கமிட்டி

நோபல் கமிட்டி என்பது நார்வே நோபல் கமிட்டி, கரோலின்ஸ்கா ராயல் ஸ்விஸ் அகாடமி மற்றும் நோபல் சபை ஆகிய
நான்கு அமைப்புகளைக் கொண்டது. ராயல் ஸ்விடிஸ் அகாடமி, ஸ்டாக் ஹோம் ஆகியவை இயற்பியல், வேதியியல் மற்றும்
பொருளாதாரம் ஆகிய துறைகளில் நோபல் பரிசிற்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கின்றன.

கரோலின்ஸ்கா நிறுவனத்திலுள்ள நோபல் அசெம்பிளி, ஸ்டாக் ஹோம் ஆகியவை மருத்துவத்திற்கும், ஸ்வீடிஸ் அகாடமி
ஆகியவை இலக்கியத்திற்கும் நார்வீஜியன் நோபல் கமிட்டி, ஓஸ்கோ அமைதிக்கும் பரிசுக்குரியவர்களை தேர்ந்தெடுக்கிறது.

தேர்வு செய்யும் முறை


உலக அளவில் உள்ள விஞ்ஞான அமைப்புகள் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள்
தங்களின் பிரதிநிதிகளையும் ஆராய்ச்சி கட்டுரைகளையும் அனுப்பி வைத்து அதனுள் தகுதியானவர்களின் கட்டுரைகளையும்
ஆய்வுகளையும் சிறந்த நிபுணர்களைக் கொண்டு விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு சுமார் 6 கோடி ரூபாய் ரொக்கமாகவும், 23 காரட் தங்கத்திலான சுமார் அரை பவுண்ட் எடையிலான
தங்கப்பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படுகிறது.

இயற்பியல் துறை
சார்லஸ் கேகாவ்


சீனாவின் ‘ஷாங்காயில் 1933-ஆம் ஆண்டு பிறந்தவர். பிரிட்டனில் வசித்து வருகிறார். இவர் அமெரிக்கக் குடியுரிமையும்
பெற்றுள்ளார். லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் 1966- ஆம் ஆண்டு மின் பொறியியலில் டாக்டர் பட்டம் பெற்றவர்.
‘ஷாங்காய் பல்கலைகழகத்தில் துணை வேந்தராக பணியாற்றி 1999-ல் ஓய்வு பெற்றவர்.

ஜார்ஜ் இ ஸ்மித்

அமெரிக்காவில் 1930- ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் சிகாகோ பல்கலைகழகத்தில் இயற்பியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர்.
அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் உள்ள பெல் ஆய்வுக் கூடத்தில் பணியாற்றி 1986-ல் ஓய்வு பெற்றவர்.

வில்லார்ட் எஸ் பாய்லே

கனடாவில் 1924-ஆம் ஆண்டு பிறந்தவர். அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளார். கனடாவில் உள்ள மேக்கில் பல்கலைகழகத்தில்
இயற்பியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர். அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் உள்ள பெல் ஆய்வுக் கூடத்தில் பணியாற்றி
1974-ல் ஓய்வு பெற்றவர்.

கண்டுபிடிப்புகள்

சார்லஸ் கே காவ் கண்ணாடி இழையில் ஓளியை பயணம் செய்ய வைத்து சாதனை நிகழ்த்தினார்.

வில்லார்ட் எஸ் பாய்லே, ஜார்ஜ் இ ஸ்மித் ஆகிய இருவரும் இமேஜிங் செமி கண்டக்டர் சர்க்யூட்டை (சிசிடி சென்சார்)
வடிவமைத்து சாதனை நிகழ்த்தியுள்ளனர். இதன்மூலம் உலகின் எந்த மூலையில் உள்ளவரையும் தொலைபேசி மூலம்
தொடர்பு கொள்வதும், தகவல்களை இணைய தளம் மூலம் மிகத் துரிதமாக பரிமாறிக் கொள்வதும் சாத்தியமாகும்.

வேதியியல் துறை

இம்முறை வேதியியல் துறையில் நம் இந்தியரான வெங்கட்ராமகிருஷ்ணன் யெடா.இ. யோனத் தாமஸ் “ஸ்டீட்ஸ்
என்னும் சக விஞ்ஞானிகளுடன் நோபல் பரிசை பகிர்ந்து கொள்கிறார்.

வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்




கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர். சிதம்பரத்தில் 1952-ஆம் ஆண்டு பிறந்தவர். 1971-ல் குஜராத்தில் உள்ள
பரோடா பல்கலைகழகத்தில் இயற்பியலில் பி.எஸ்.சி பட்டம் பெற்று அமெரிக் காவில் உள்ள ஓஹையோ பல்கலைகழகத்தில்
முனைவர் பட்டம் பெற்றவர். அதன்பின் உயிரியல் ஆய்வில் ஈடுபட்டார். இப்பரிசை பெறும் 3-வது தமிழர், ஏழாவது வெளிநாடு
வாழ் இந்தியர் ஆவார்.

யெடோ இ. யோனத்


இஸ்ரேலைச் சேர்ந்த யோனத், ஜெருச லேமில் 1939-ல் பிறந்தவர். வைஸ்மான் அறிவியல் கல்லூரியிலிருந்து 1968-ல்
எக்ஸ்ரே கிரிஸ்ட லோகிராபி பிரிவில் முனைவர் பட்டம் பெற்றவர்.

தாமஸ் ஸ்டீட்ஸ்

அமெரிக்காவைச் சேர்ந்த தாமஸ் ஸ்டீட்ஸ் விஸ்கான்சின் மாகாணம் மில்வாகியில் 1940-ஆம் ஆண்டு பிறந்தார்.
ஹார்வார்டு பல்கலைகழகத்திலிருந்து 1966-ல் உயிரி வேதியியல் மற்றும் மூலக்கூறு உயிரியலில் முனைவர் பட்டம்
பெற்றவர்.v கண்டுபிடிப்பு

செல்களில் ரிபோசோம்கள் புரதத்தைத் தயாரிக்கின்றன. இந்தப் புரதங்கள்தான் உடல்கூறு வேதியல் பணியை கட்டுப்படுத்துகின்றன.
ரிபோசோம்களை உருவாக்கும் ஆயிரக்கணக்கான அணுக்கள் ஒவ்வொன்றின் இட அமைப்பையும் படம் பிடிக்க இம்மூவரும்
எக்ஸ்ரே கிரிஸ்டலோ கிராபி முறையை பயன்படுத்தியுள்ளார்.

மேலும் அணு நிலையில் அதன் அமைப்பு, செயல்படும் விதம், எவ்வாறு ரிபோ சோம்களில் ஆண்டிபயோட்டிக்குகள்
ஒட்டிக் கொள்கின்றன என்பதை 3-டி. மாதிரிகள் மூலம் விளக்கியுள்ளனர். இதன்மூலம் பல்வேறு நோய்களைக் குணப்படுத்த
தேவையான ஆண்டிபயோடிக் மருந்துகளைத் தயாரிக்க முடியும்.

மருத்துவம்
எலிசபெத் பிளாக்பர்ன்


ஆஸ்திரேலியாவில் 1948-ல் பிறந்தவர். பிரிட்டனில் கேம்பி ரிட்ஜ் பல்கலைகழகத்தில் 1975-ல் டாக்டர் பட்டம் பெற்றவர்.

ஜேக் சோஸ்டாக்

லண்டனில் 1952-ல் பிறந்தவர். இவர் நியூயார்க்கின் கார்னெல் பல்கலை கழகத்தில் 1975-ல் டாக்டர் பட்டம் பெற்றவர்.
1979 முதல் ஹார்வார்டு மருத்துவ பல்கலைகழகத்தில் பணியாற்றி வருகிறார்.

கரோல் கிரெய்டர்

அமெரிக்கரான கரோல் கிரெய்டர் 1961-ல் பிறந்தவர். 1987-ல் கலிஃபோர்னியா பல்கலைகழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்.

கண்டுபிடிப்பு

வயோதிகத்திற்கு காரணமான செல் மற்றும் செல் பிரிதலின் போது குரோமோ சோம்கள் எவ்வாறு பிரதி எடுக்கின்றன என்பதை
இவர்கள் கண்டறிந்துள்ளனர். இது புற்று நோய் தொடர்பான ஆராய்ச்சிக்கு பெரிதும் உதவும்.

இலக்கியம்
ஹெர்தா முல்லர்


ருமேனியாவில் பிறந்தவர் ஹெர்தா முல்லர். 1982-ல் தாழ்ந்த பூமி என்ற பெயரில் எழுதிய சிறுகதைகள் மூலம் எழுத்துலகிற்கு
அறிமுகமானவர். இவருடைய லேண்ட்ஸ்கேப் ஆப்தி டிஸ்பொசஸ்ட் (வறியவர் பூமி) என்ற படைப்புக்காக இவ்விருது கொடுக்கப்படுகிறது. ருமேனியாவில் வசித்த முல்லரின் பெற்றோர் சிறுபான்மை ஜெர்மனி சமூகத்தைச் சார்ந்தவர்கள். ருமேனியாவில் சிறுபான்மை
ஜெர்மனியர் வாழும் கிராமம் ஒன்றில் இழைக்கப்படும் கொடுமைகளை விவரிக்கின்றது இச்சிறுகதை நூல். இதனை ருமேனிய அரசு
தடை செய்தது. 1984-ல் இக்கதைகள் ஜெர்மனி கொண்டு செல்லப்பட்டு, அங்கு வெளியிடப்பட்டது. ருமேனிய அரசின் ஊழல் அடக்குமுறை,
சர்வாதிகார ஆட்சியை விமர்சித்த இந்நூல் ருமேனிய சர்வாதிகாரி நிகோனு செசேஸ்கு பதவி நீக்கம் செய்யப்பட்டு மரண தண்டனை
கொடுக்கப்பட காரணமாயிற்று.

அமைதி
பராக் ஒபாமா


கென்யா நாட்டை சேர்ந்தவருக்கும், அமெரிக்க பெண்மணிக்கும் பிறந்த ஒபாமா, அமெரிக்காவின் முதல்
ஆப்ரிக்க- அமெரிக்க அதிபர் ஆவார்.

சர்வதேச அளவில் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தியது, அணு ஆயுத குறைப்பு நடவடிக்கை, நாடுகளுக்கிடையேயான உறவை
மேம்படுத்தியது, பருவநிலை மாற்றம் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தது ஆகியவையும்,
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன தலைவர்களை சந்திக்க வைத்து அமைதியை ஏற்படுத்தியது, ஒபாமாவின் ஐரோப்பிய
நாடுகளுக்கான புதிய ஏவுகணை பாதுகாப்பு கொள்கைக்கு ரஷ்யா ஆதரவளித்ததன் மூலம் இரு வல்லரசுகளுக்கிடையே பனிப்போரை
முடிவுக்கு கொண்டு வந்தது போன்றவை ஒபாமாவை நோபல் பரிசு பெற வைத்தது.

பொருளாதாரம்


பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை அமெரிக்காவைச் சேர்ந்த எலினோர் ஆஸ்ட்ரோம் மற்றும் ஆலிவர் இ. வில்லியம்சன்
ஆகியோர் கூட்டாகப் பெற்றுள்ளனர். பொருளாதார நிர்வாகம் குறித்த அவர்களின் ஆய்வுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது.
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசைப் பெறும் முதலாவது பெண்மணி என்ற பெருமையை ஆஸ்ட்ரோம் பெற்றுள்ளார்.
மேலும் இந்த ஆண்டு நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்ட பெண்களில் ஐந்தாமவர் என்ற பெருமையும் இவரையே சாரும்.
ஒரே ஆண்டில் ஐந்து பெண்கள் நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. ஆஸ்ட்ரோமின் ஆய்வு
அறிக்கையானது பொருளாதார நிர்வாகம் சார்ந்தது. இதில் பொது சொத்தை ஒரு குழுவினர் வெற்றிகரமாக நிர்வகிப்பது எப்படி?
என்பதை விவரிக்கிறது.

எலினோர் ஆஸ்ட்ரோம்

1933-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி பிறந்த இவர் பொருளாதாரத்தில் மிகுந்த நாட்டமுடையவர். இண்டியானா பல்கலைக்கழகத்தில்
கணவர் வின்சென்ட் ஆஸ்ரோமுடன் இணைந்து தனி ஆய்வுப் பிரிவைத் தொடங்கியவர். கூட்டுச் செயல்பாடு, அறக்கட்டளை மற்றும்
பொது விவகாரங்களில் நிபுணத்துவம் உடையவர். அரிசோனா மாகாண பல்கலைக்கழகத்தில் பகுப்பாய்வு குறித்த ஆய்வு மையத்தின்
நிறுவன இயக்குநராகவும் இவர் உள்ளார்.

ஆலிவர் இ. வில்லியம்சன்

1932-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி பிறந்த ஆலிவர் இ. வில்லியம்சன் பொருளாதாரத்தில் பரிமாற்றச் செலவு குறித்த ஆய்வை
மேற் கொண்டார். ஸ்டான்ஃபோர்டு பல்கலையில் முதுகலை நிர்வாகவியல் பட்டமும் கார்னீகி மெலோன் பல்கலையில்
டாக்டர் பட்டமும் பெற்றார். நிர்வாகவியல், பொருளாதாரம் ஆகிய துறைகளின் பேராசிரியராகப் பணியாற்றிய இவர்,
பெர்க்ளி பல்கலைக்கழகத்தில் சட்டமும் பயின்றுள்ளார். பொருளாதாரம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் நூல்களை
எழுதியுள்ள இவர் வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க் விருது, ஹார்ஸ்ட் கிளாஸ் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

No comments: