பண்டைய எகிப்தின் நைல்நதியில் திடீரென பெருவெள்ளம் வந்து செழுமையான விளைநிலங்களின் எல்லைகளை அழித்துவிட்டுக் கமுக்கமாய்ப் போய்க்கொண்டிருந்தது. பொய் நிலப்பத்திரம் காட்டி அபகரிக்கப் பார்க்கும் ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் இல்லாததால் ஊர்த்தலையாரிகள் ஒன்று கூடி ஊரின் நில அளவைப் பேப்பர் பேனா இல்லாமல் இலைகளிலும் விலங்குகளின் தோல்களிலும் குறியிட்டுவைத்த அந்தக் கணத்தில் தான் GIS கருக்கொண்டது என்பது இத் துறையின் ஜாம்பவான்கள் பலரின் அபிப்ராயம்.
கொஞ்ச காலம் படிப்படியாகவும் அதற்கப்புறம் லிப்ட் லிப்டாகவும் முன்னேறி எங்கோயோ போய் உங்களின் நடமாட்டத்தை ஒரு மொபைல் போனிலிருந்தோ கம்பியூட்டர் மானிட்டரிலிருந்தோ உளவறிய முடியும் என்பதையும் தாண்டி போய்க்கொண்டிருக்கிறது. இந்தக் கணத்தில் ஒரு நூறாயிரம் பேராவது GIS புரோகிராம்களுக்கு கட்டளைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதில் கணிசமான பேர் கைத்தொலைபேசி GIS புரோகிராம்களுக்கும். (GIS Applications.. for mobile Phones)
கட்சித்தலைவரின் நாய் வாக்கிங் போகும்போது பஸ்ஸில் அடிபட்டு கால் ஒடிந்துவிட்டதென்பதற்காக பஸ்மீது கல்வீச்சு கலாட்டா இல்லாத ஒரு சுப நாளில் சென்னை போக யோசிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். எந்த பஸ்ஸில் போகலாம்? மவுண்ட் ரோடு வழியா அடையார் வழியா? ஒவ்வொரு வழியிலும் எங்கெங்கே பஸ் நிற்கும். எங்கே இறங்கினால் மளிகைச்சாமான் வாங்கிவிட்டு, அப்படியே ஆஸ்பத்திரியில் போய் ஆப்பரேசன் முடிந்து கிடக்கும் நண்பனையும் பார்த்துவிட்டு ..விட்டு...விட்டு...இப்படி ஒரு பிளான் பண்ணுவோமா இல்லியா?. Then, You are Thinking in GIS!
நீங்கள் நாகர்கோவில்(அவரவர் தங்களின் பக்கத்து ஊரை நினைத்துக்கொள்ளுங்கள்) போறது ஒரு சின்னவிஷயம். டக்குன்னு அலசி (Analysis) ஒரு தீர்மானத்திற்கு (Decision) வந்துவிடலாம். ஏனென்றால் அதற்குண்டான விபரத் தொகுப்பு (Database) உங்கள் மனதில் பதிந்திருக்கிறது. இதையே பரிச்சயக்குறைவான திருவனந்தபுரமோ, மும்பையோ, பெங்களூரோ பொவதென்றால் அப்படி புறப்பட்டுவிட முடியுமா? . அன்னிக்குப்பார்த்து, "எனக்கு ஆபீஸிலே மீட்டிங் இருக்கே, உங்களெ கூப்டெ வரமுடியாதே" என்று சொல்லும் மச்சினன் இருந்துவிட்டால், முதலில் இந்நகரங்களைப்பற்றிய விபர சேகரிப்பில் (Data Collection) நம்மையறியாமலேயெ இறங்குவோம். பஸ் எங்கே போய் நிற்கும்?. அங்கிருந்து மேப்படியான் வீட்டிற்குச் செல்வதெப்படி? அன்று துண்டுக்காகிதத்தில் தந்த வரைபடம் (Map) இருக்கிறதா....இப்படி. இதெல்லாம் சின்ன விஷயங்கள். இந்த விஷயங்களுக்கே முடிவெடுக்க ஒரு சிஸ்டம் தேவைப்படுகிறது. அந்த சிஸ்டத்திற்குள் பல Component தேவை. அவையாவன, Data Collection, Database, Analysis, Map, Decision Making...இப்படி இன்னும் பல.
சரி, அது GIS க்கு மட்டும்தானா? எல்லா விஷயங்களுக்கும் அப்படித்தானே அய்யா? என்றால் இல்லை. GIS இல் இந்த வார்த்தைகளுக்கு முன்னால் ஒரு மாஜிக் வார்த்தை சேர்ப்பார்கள். spatial!. Spatial data Collection, Spatial Data Base, Spatial Analysis இப்படி. அதன் அர்த்தம் என்னவென்றால் எவ்வளவு சிறிய யூனிட் டேட்டா என்றாலும் அது புவியின் ஏதேனும் ஒரு புள்ளியோடோ அல்லது பல புள்ளிகளோடோ இணைக்கப் பட்டிருக்கும். (Linked to Location(s) in the Earth).
"புவியியல் தகவல் தொழில்நுட்பம் என்பது, புவியிடத்தோடு உறவுபடுத்தப் பட்ட தகவல்களைச் சேகரித்து, ஒருமித்து வைத்து, அலசி, ஆராய்ந்து, வகைப்படுத்தி அளிப்பது" என்று வேண்டுமானால் தமிழில் சொன்னாலும், அதன் உண்மையான அர்த்தம் வெளிப்படவில்லை. இங்கு போய்ப்பாருங்கள் அதன் அர்த்தம் என்னவென்று.
(இன்னும் வரும்)
- அப்துர் ரஷீது, தோஹா.
No comments:
Post a Comment