மும்பை: மும்பையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சேவை மனப்பான்மையுடன் சில துணிச்சலான செயல்களை செய்து வருகிறார். குடிசைப் பகுதி குழந்தைகள் படிக்கும் பள்ளிகளை தத்தெடுப்பது, வரதட்சணைக்கு எதிராக போராடுவது போன்ற சில புதுமையான செயல்களை செய்து, அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.
கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்டவர் ராகுல் பிரகாஷ் சுவர்ணா (26). தற்போது, மகாராஷ்டிராவின் தானே பகுதியில் வசித்து வருகிறார். சேவை மனப்பான்மை உடையவர். அதே நேரத்தில், புதுமையான செயல்களையும் செய்பவர். இவரது உண்மையான பெயர் ராகுல் பிரகாஷ் ஜாதவ். சுவர்ணா என்பது, இவரது தாயாரின் பெயர். தனது பெயருக்கு பின், தாயாரின் பெயரை சேர்த்துக் கொள்ள விரும்பினார். இதற்கு அவரது உறவினர்களும், குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தாலும், தனது கொள்கையில் பிடிவாதமாக இருந்தார். இறுதியில், தனது பெயருடன், தனது தாயாரின் பெயரை இணைத்துக் கொண்டார். இதனால் பஞ்சாயத்தில், இவரை ஊரை விட்டே விலக்கி வைத்தனர். ஆனாலும், அவர் அதை பொருட்படுத்தவில்லை.
சில காலம் கழித்து, அடுத்த அதிரடியை அரங்கேற்றினார். இவரது மூத்த சகோதரனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பெண் வீட்டார், வரதட்சணை தர முன்வந்தனர். இது, ராகுலுக்கு அதிர்ச்சியாக இருந்தது. வரதட்சணை வாங்க கூடாது என, தனது பெற்றோரிடம் வலியுறுத்தினார். இந்த விவகாரத்திலும் குடும்பத்துக்குள் சர்ச்சை எழுந்தது. இறுதியில், ராகுல் தான் வெற்றி பெற்றார். அவர் கூறியபடி, வரதட்சணை வாங்காமல் திருமணம் நடந்தது.
அடுத்ததாக, திருமண நிகழ்ச்சிகளின் போது மணமக்களின் மீது, அரிசி தூவுவதையும் தடுக்க வேண்டும் என, ராகுல் நினைத்தார். "நம் நாட்டில் லட்சக்கணக்கான குழந்தைகள், போதிய ஊட்டச்சத்து இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பலர் ஒருவேளை உணவு கூட இல்லாமல் வறுமையில் வாடுகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், ஆடம்பரத்துக்காக மணமக்கள் மீது அரிசியை தூவி, அதை வீணடிப்பதேன்' என, கேள்வி எழுப்பினார். வழக்கம்போல, இதற்கும் சமூகத்திலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. இருந்தாலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியுடன், ஒவ்வொரு ஊராகச் சென்று, இதுகுறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்.
இதுகுறித்து ராகுல் பிரகாஷ் சுவர்ணா கூறியதாவது: திருமணங்களின் போது, அரிசி வீணடிக்கப்படுவது எனக்கு பெரும் கவலை அளித்தது. இதுகுறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்து, இதுவரை 35 ஆயிரம் டன் அரிசியை, வீணடிக்காமல் சேமிக்க வைத்துள்ளேன். விலங்குகள் மீதும் எனக்கு ஆர்வம் அதிகம். மனிதர்களால் பாம்புகள் கொல்லப்படுவதை தடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறேன். "அக்னாஷா' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் மும்பையில் குடிசைப் பகுதிகளில் செயல்பட்டு வந்த மூன்று மாநகராட்சி பள்ளிகளை தத்தெடுத்துள்ளேன். இந்த பள்ளிகள், போதிய ஆசிரியர் இல்லாமல், மூடப்படும் நிலையில் இருந்தன. தற்போது இதற்கு ஆசிரியர்களை நியமித்துள்ளோம். இந்த பள்ளிகளில், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 650 குழந்தைகள் படிக்கின்றனர். தற்போது இந்த பள்ளிகள் நல்ல முறையில் செயல்படுகின்றன. நல்ல உள்ளம் கொண்டோரிடம், இதற்காக நிதியும் திரட்டுகிறோம். இவ்வாறு ராகுல் பிரகாஷ் சுவர்ணா கூறினார்.
No comments:
Post a Comment