Thursday, February 17, 2011

3ஜி மொபைலால் இயங்கும் ரோபோ துப்பாக்கி: நாகாவதி அணை பள்ளி மாணவர்கள் சாதனை


மேட்டூர் : தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால், 3 ஜி மொபைல் உதவியால் இயங்கும் தானியங்கி ரோபோ துப்பாக்கியை, தமிழக எல்லையில் உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ, மாணவியர் தயாரித்து சாதனை படைத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், பிடமனேரியைச் சேர்ந்தவர் ஜெயபாண்டியன் (43). இந்தியன் கல்வி அறக்கட்டளை நிறுவி நடத்தி வரும் ஜெயபாண்டியன், வீட்டு வேலை செய்யும் ரோபோ, தானியங்கி சிக்னல் உட்பட, 128 அறிவியல் படைப்புகளை உருவாக்கியுள்ளார்.தொடர்ந்து, ஜெயபாண்டியன் தர்மபுரி மாவட்டம், நாகாவதி அணை அரசு துவக்க பள்ளி மாணவர்கள் உதவியோடு, 3ஜி மொபைல் போன் மூலம் இயங்கும் தானியங்கி ரோபோ துப்பாக்கியை வடிவமைத்துள்ளார். சேலம் மாவட்டம், மேட்டூர் மால்கோ மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முன்னிலையில் நேற்று, ரோபோ துப்பாக்கியை ஜெயபாண்டியன் இயக்கிக் காட்டினார்.

நிகழ்ச்சியில், மால்கோ பள்ளி முதல்வர் தேவராஜ், ஆசிரிய, ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஜெயபாண்டியன் கூறியதாவது:"தர்மபுரியில், "மாணவர்கள் மியூசியம்' என்ற பெயரில் ஒரு கண்காட்சிக் கூடம் அமைக்க உள்ளோம். அதில், என் அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் மாணவர்கள் உதவியுடன் உருவாக்கிய அறிவியல் சாதனங்கள் வைக்கப்படும்.இந்த கண்காட்சிக்கூடம், மாணவர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும். எங்கள் புதிய கண்டுபிடிப்பான ரோபோ துப்பாக்கியை ஆட்கள் இல்லாமல் எங்கிருந்து வேண்டுமானாலும் இயக்க முடியும். துப்பாக்கியின் ஒரு முனையில் 3ஜி மொபைல் வைத்து விட்டால் போதும், எந்த நாட்டில் இருந்தும் மற்றொரு, 3 ஜி மொபைல் மூலம் துப்பாக்கியில் உள்ள, 3ஜி மொபைலை தொடர்பு கொண்டு, துப்பாக்கியை இயக்கி இலக்கை நோக்கி குறி பார்த்து சுட முடியும்.

நாட்டின் எல்லைப் பகுதியில் வீரர்களே இல்லாமல், துப்பாக்கி, 3ஜி மொபைல் மட்டுமே வைத்து விட்டு அலுவலகத்தில் இருந்தவாரே கண்காணித்து இலக்கை சுட முடியும். இதில் உள்ள தொழில்நுட்பத்தை மேம்படுத்தி ராணுவத்திலும் பயன்படுத்த முடியும். விரைவில், தர்மபுரியில் இந்திய அளவிலான போட்டி நடத்தவுள்ளோம்.பங்கேற்கும் போட்டியாளர்கள் நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் இருந்தாலும், அங்கு இருந்தவாறே மொபைல் மூலம் தர்மபுரியில் உள்ள வீட்டு வேலை செய்யும் ரோபோ மற்றும் 3ஜி ரோபோ துப்பாக்கியை இயக்கி சுட வேண்டும். சிறப்பாக இயக்கிக் காட்டுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்' என்றார்.

நாகாவதி அணை அரசு துவக்கப் பள்ளி தலைமையாசிரியர் கோவிந்தராஜ் கூறியதாவது:ரோபோ துப்பாக்கியை வடிவமைக்க, 30 ஆயிரம் ரூபாய் வரை செலவாகியது. செலவுகளை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். ரோபோ துப்பாக்கி உதிரி பொருட்களை எங்கள் மாணவர்கள் சேகரித்து வழங்கினர். துப்பாக்கியை தனித்தனியாக பிரித்து, மீண்டும் பொருத்தும் அளவுக்கு எங்கள் பள்ளி மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர், என்றார்.

No comments: