கோவை : "பூகம்பமும், சுனாமியும் ஜப்பானில் பேரழிவை ஏற்படுத்திய போதும், ஜப்பானியர்களின் இயல்பு வாழ்க்கையில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. அவர்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் செயல்படுகின்றனர்' என, ஜப்பான் வாழ் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை, ராம்நகர் பகுதியைச் சேர்ந்த அசோக், தனியார் நிறுவனத்தின் ஜப்பான் பிரிவில் பணிபுரிகிறார். மத்திய ஜப்பானில் கரியா பகுதியில், அசோக் மற்றும் கோவையைச் சேர்ந்த நண்பர்கள் சிலர் ஒரே அபார்ட்மென்டில் தங்கியுள்ளனர். அசோக், தனது குடும்பத்தினரை, "வெப்கேமரா' மூலம் நேற்று தொடர்பு கொண்டார். அசோக், அவரது நண்பர் களுடன் வெப் கேமரா உதவியுடன், தினமலருக்காக பேசினோம்.
அவர்கள் கூறியதாவது:நாங்கள் மத்திய ஜப்பானில் கரியா என்றபகுதியில் வசிக்கிறோம். ஜப்பானின் வடகிழக்குப் பகுதிகள் தான், பூகம்பம், சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு பணிபுரியும் இந்தியர்களின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை. பாதிப்புக்கு உள்ளான பகுதியிலும் தொலைதொடர்பு வசதிகள் இருக்கின்றன.இந்திய ஊடகங்களைப் பார்க்கும் போது, ஜப்பான் முழுமையாக நிலைகுலைந்து விட்டது போன்ற செய்திகள் வருகின்றன. நிலைமை அப்படி இல்லை. ஜப்பானின் ஒரு பகுதி தான் பாதிக்கப்பட்டிருக்கிறது. சுமார் 60, 70 கி.மீ., தூரம் பாதிக்கப்பட்டிருக்கும். இதுபோன்ற இயற்கைப் பேரிடரை இந்தியா சந்தித்திருந்தால், 10 லட்சம் மக்கள் வரை உயிரிழந்திருப்பர்.
ஜப்பானியர்கள் அவ்வளவு முன்னெச்சரிக்கையுடன் இருக்கின்றனர். இயல்பு வாழ்க்கையில் பெரிய அளவில் பாதிப்பில்லை. சொல்லப்போனால், இங்கு வாழும் வெளிநாட்டவர்கள்தான் சிறிது பயத்தில் உள்ளோம். ஆனால், அவர்கள் (ஜப்பானியர்கள்) மிகுந்த தன்னம்பிக்கையுடன், இயல்பாக நடந்து கொள்கின்றனர்.மீட்புப்பணிகள் துரித வேகத்தில் நடக்கின்றன. மீட்பு பணிகள் விஷயத்தில் வேறு யாருடனும் அவர்களை ஒப்பிட முடியாது. அணுஉலைகளில் இருந்து கதிர்வீச்சு வெளிப்படும் அபாயம் இருப்பதாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. இதனால், மிகப் பெரும் அபாயம் இருப்பதாகத் தெரியவில்லை. சிறிய அளவிலான பாதிப்பு ஏற்படலாம்; அதையும் ஜப்பானியர்கள் திறமையாக சமாளித்து விடுவர். மற்றபடி, ஜப்பானின் இதர பகுதிகளில் இயல்பு வாழ்க்கை தான் காணப்படுகிறது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment