Friday, January 28, 2011

"ஓட்டுப் போடுங்க சாமியோவ்!'

கோவை : கருப்பாத்தாளுக்கு வயசு 110; கூடவும் இருக்கலாம். கூன் விழுந்த முதுகு, நடை தளர்ந்திருக்கிறது, பார்வையில் கூர்மையில்லை, கண்ணாடியுமில்லை. செவித்திறன் குறைந்து இருக்கிறது. கம்பை ஊன்றித் தான் நடக்கிறார். ஆனாலும், குரலின் கம்பீரம் குறையவில்லை. அதே குரலில், மைக்கைப் பிடித்து அவர் சத்தம் போட்டுச் சொன்ன வார்த்தை தான், "ஓட்டுப் போடுங்க சாமியோவ்!'

ஒரு முறையில்லை; மூன்று முறை தொடர்ச்சியாய் அவர் சத்தமாய்க் கோரிக்கை வைக்க, கலையரங்கம் முழுவதும் கரவொலியால் அதிர்கிறது. கருப்பாத்தாளுக்கு என்று வேறு சிறப்புகள் எதுவுமில்லை; அவருக்கு இருக்கும் ஒரு தனிச்சிறப்பு, வேறு யாருக்கும் இருக்க வாய்ப்பில்லை. அவர்தான், கோவை மாவட்டத்தின் மூத்த வாக்காளர். இதுவரை, எந்தத் தேர்தலையும் விடாமல் ஓட்டளித்தவர்.தேசிய வாக்காளர் தினமான நேற்று, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்த, "மூத்த குடிமகளை' மேடையேற்றி கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அவருக்கு பொன்னாடை போர்த்தி, சந்தன மாலை அணிவித்து கவுரவித்தார் கோவை கலெக்டர் உமாநாத். சிறப்புப் பரிசும் வழங்கப்பட்டது.

கருப்பாத்தாளுக்கு சொந்த ஊர், காரமடை ஒன்றியத்தைச் சேர்ந்த கணுவாய்பாளையம். கோவை மாவட்ட வாக்காளர் பட்டியலில் மூத்த வாக்காளர் யார் என்று தேர்தல் பிரிவு தாசில்தார் மன்மோகன் தேடிய தேடலில் கிடைத்த பெயர் தான் கருப்பாத்தாள். அவரைத் தேடிப் பிடித்து, தேசிய வாக்காளர் தினத்துக்கு அழைத்து வந்து, மேடையேற்றி கவுரவித்ததோடு, அவரது வாயாலேயே ஓட்டளிக்கவும் அழைப்பு விடுத்தது தான் நிகழ்ச்சியின், "ஹை லைட்!'நிகழ்ச்சியில், பங்கேற்றிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள், ஓட்டுப் போடும் வயதுக்கு வராத மாணவ, மாணவியர் தான். ஆனாலும், ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற கருப்பாத்தாள் விடுத்த அழைப்பு, இன்னும் பல ஆண்டுகளுக்கு அவர்களது செவிகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கும் என்பது உறுதி.

ஒரு தேர்தலையும் விட்டு வைக்காமல் விரலிலே மை வைத்துக் கொண்ட கருப்பாத்தாளிடம், "இதுவரை யார் யாருக்கு ஓட்டுப் போட்டிருக்கிறீர்கள்?' என்று கேட்டால், "நிறையப் பேருக்குப் போட்டிருக்கேன்' என்று பதில் கூறி, ஓட்டுரிமை ரகசியத்தைக் காத்துக் கொண்டார். கடைசி முயற்சியாய், "சரி! வரும் தேர்தலில் யாருக்கு ஓட்டுப் போடுவீங்க?' என்று கேட்டதற்கு, பொக்கை வாயில் புன்னகை சிந்த அவர் சொன்ன பதில், "உங்களுக்குத் தான்!'பாட்டி... உஷார் பார்ட்டிதான்!

No comments: