Monday, October 27, 2014

லாட்டரி சீட்டு விற்றவர் இன்று ஐ.ஏ.எஸ்.,அமெரிக்க அதிபர் அளித்த கவுரவம்


காரைக்குடி:“நான் கற்ற கல்வியால் தான் எனக்கு அமெரிக்க அதிபரின் மாளிகையில் கவுரவம் கிடைத்தது,” என காரைக்குடியில் வருமான வரி இணை கமிஷனர் நந்தகுமார் பேசினார்.
காரைக்குடி அருகே ஸ்ரீராம்நகர் யுனிவர்சல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவன ஆண்டு விழா நடந்தது.

இணை கமிஷனர் நந்தகுமார் பேசியதாவது:நாம் சாப்பிடுவதில் கூட நல்லவற்றை தேர்வு செய்கிறோம். ஆனால் படிப்பு விஷயத்தில் மட்டும் பிள்ளைகளின் விருப்பத்திற்கு ஏற்ற வாய்ப்பை தருவதில்லை. வாழ்க்கையை எட்டிப்பிடிக்கும் போது கிடைப்பதுடன் நின்று விடுகிறோம். சிறந்த கல்வியை தேர்வு செய்வது கட்டாயம்.

நான் எனது சிறுவயதில் வீட்டுப்பாடம் கொடுத்தால் எழுதத் தெரியாது. ஆறாம் வகுப்புடன் என் படிப்பு நின்றது. பின், லாட்டரி சீட்டுக்கள் விற்பனை, மெக்கானிக் ஷாப், ரேடியோ பழுதுபார்த்தல் பணிகளை செய்தேன். படிப்பை நிறுத்திய பின் தான் அதன் அருமை தெரிந்தது. பணி செய்து கொண்டே படித்தேன். அரசுக் கல்லுாரியில் பி.ஏ., (ஆங்கில இலக்கியம்) சேர்ந்தேன். கஷ்டப்பட்டு தேர்ச்சி பெற்றேன். கடந்த 2004ல் 12 லட்சம் பேர் எழுதிய சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றேன்; ஐ.ஏ.எஸ்., பணியில் சேர்ந்து பின், விருப்பத்தின் அடிப்படையில் வருமான வரித்துறையில் பணிபுரிகிறேன்.

வீட்டிலிருந்து சாப்பிட ஓட்டலுக்கு 5 கி.மீ., நடந்தே சென்றேன். கல்வி தந்த வளர்ச்சியால் எனக்கு பிரதமர், ஜனாதிபதி அளித்த விருந்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. சாதாரண குடும்பத்தை சேர்ந்த நான் உத்தரபிரதேச தேர்தல் பார்வையாளராக இருந்தேன். என் பணியை அறிந்த அமெரிக்க அதிபர் ஒபாமா என்னை தேநீர் விருந்துக்கு அழைத்து கவுரவப்படுத்தினார். இந்த கவுரவம் அனைத்தும் என் கல்விக்கு தான் கிடைத்தது.இவ்வாறு பேசினார்.

பாரத் கல்வி குழும தலைவர் விஸ்வநாத கோபாலன், இணை ஒருங்கிணைப்பாளர் ஆதீனம், கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வர் கல்யாணராமன் பங்கேற்றனர்.

No comments: