Monday, May 9, 2011

" இலக்கு நிர்ணயித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம் '' 3 வது இடத்தை பிடித்த மாணவர் பேட்டி

தேனி: ""அனைவரும் ஒரு இலக்கை நிர்ணயித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்,'' என மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்ற மாணவர் ரகுநாத் தெரிவித்தார்.

தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ரகுநாத், 1,186 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் மூன்றாம் இடம் பெற்றார். கம்ப்யூட்டர் சயின்ஸ், பொருளாதாரம், வணிகவியல் பாடங்களில் 200 க்கு 200 மதிப்பெண்களும், கணக்குபதிவியல்- 199, தமிழ்- 196, ஆங்கிலம்-191 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.இவரது தந்தை நாகேஷ்வரன், அங்குள்ள மெர்க்கன்டைல் வங்கியில் மேலாளராக உள்ளார். தாய் அனுசுயா, தம்பி ரோகித் ஆகியோர் உள்ளனர்.
வெற்றி குறித்து ரகுநாத் கூறியதாவது:எப்போதுமே ஒரு இலக்கை நமக்கு நாமே நிர்ணயித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம். எப்படியும் 98 சதவீதம் மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து படித்தேன். பள்ளியில் ஆசிரியர் நடத்தும்போதே கவனமாக கேட்டு புரிந்துகொள்வேன். வீட்டில் வந்து அன்று நடத்திய பாடங்களை அன்றே படித்து முடித்து விடுவேன். அப்பா எதற்காகவும் கண்டிக்க மாட்டார். அவ்வப்போது சில ஆலோசனைகளை வழங்கினார். நான் எதற்கும் டென்ஷன் ஆகமால் இருப்பேன். அம்மா எனக்கு தியானம் சொல்லி கொடுத்தார். பள்ளியில் ஆசிரியர்கள் நல்ல பயிற்சி அளித்தனர். இரவு 8 மணி வரை கூட சிறப்பு வகுப்புகள் நடத்தி படிக்க வைத்தனர். பி.ஏ., பொருளாதாரம் படிக்க உள்ளேன். அதன் பிறகு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றிபெறுவேன், என்றார்

சாதனை படைத்தவர்களுக்கு சேவை செய்ய விருப்பம்: பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்கள் பெரும்பாலானோர் டாக்டராகி மக்களுக்கு சேவை செய்யவே விரும்புவதாக தங்களது பேட்டியில் தெரிவித்துள்ளனர். இன்றைய தேர்வு முடிவில் ஓசூர் விஜய் வித்யாலயா மெட்ரிக் மேலநிலைப்பள்ளி மாணவியான ரேகா ஆயிரத்து 190 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். இவரது தந்தை திரு.கேசவன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். தாயார் மலர்விழி, நடுநிலைப்பள்ளி ஆசிரியராக பணியாற்றுகிறார். ரேகாவின் தங்கை கிருத்திகா. இவர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.

மாணவி ரேகா பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் : தமிழ் : 195 ; ஆங்கிலம் - 195; கணிதம் - 200; இயற்பியல் - 200; வேதியியல் - 200, உயிரியல் - 200.

விழுப்புரம் மாணவன் இரண்டாமிடம் : விழுப்புரம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த பாரதி மெட்ரிக்., பள்ளி மாணவன் வேல்முருகன் ஆயிரத்து 187 மார்க்குகள் பெற்று இரண்டாமிடத்தை பெற்றுள்ளார்.

3 வது இடத்தை பிடித்த 4 பேர் : வித்தியா சகுந்தலா ( எஸ்.‌ஜே.எஸ்.எஸ்.,‌ஜே மெட்ரிக்., பள்ளி , மகாராஜநகர் , திருநெல்வேலி) ரகுநாத் (டி.எச்.எம்.என்.யு., மேல்நிலப்பள்ளி முத்துதேவன் பட்டி பெரியகுளம்), சிந்துகவி (குறிஞ்சி மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி நாமக்கல்) , பி.எஸ்., ரேகா (ஸ்ரீ விஜய்வித்யாலயா மெட்ரிக்., மேல்நிலப்பைள்ளி ஓசூர்). இந்த நான்கு பேரும் ஆயிரத்து 186 மார்க்குகள் பெற்றுள்ளனர்.

கனவு நனவானது மாணவி ரேகா பேட்டி : பிளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற ஓசூர் விஜய வித்யாலயா பள்ளி மாணவி ரேகா அளித்த பேட்டியில் : தனது கனவு நனவானதாக மகிழ்ச்சி தெரிவித்தார். தனது வெற்றிக்கு ஆசிரியர்களின் ஒத்துழைப்பும், பெற்றோர்கள் மற்றும் சகோதரி அளித்த ஊக்கமும் பெரும் உதவியாக இருந்ததாக தெரிவித்தார்.

இதய சிறப்பு டாக்டராக சிந்துகவிக்கு ஆசை: 3வது இடத்தை பிடித்த நாமக்கல் குறிஞ்சிபாடி மேல்நி‌லைப்பள்ளி மாணவி பி.சிந்துகவி நான்கு பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண்கள் உட்பட 1186 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3 வது இடத்தையும், மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பிடித்தார். இது குறித்து அவர் கூறியதாவது,

மாநில அளவில் 3வது இடம் பிடித்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. படிக்கும் போது டி.வி., பார்க்க மாட்டேன். நன்றாக படித்ததால் தான் என்னால் இவ்வளவு மதிப்பெண் பெற முடிந்தது. எதிர்காலத்தில் ஒரு பெரிய டாக்டராகி கார்டியாக்(இருதய அறுவை சிகிச்சை) பிரிவில் நிபுணராகி, ஏழை மக்களுக்கு சேவை செய்‌ய வேண்டும். அதுவே எனது லட்சியம் என்று கூறியிருக்கிறார். சிந்துகவி கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த பஞ்சலிங்கம், லோகநாயகி ஆகி‌யோரின் ஒரே மகள் ஆவர். நாமக்கல்லில் விடுதியில் தங்கி படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்லை மாணவிக்கும் டாக்டராகத்தான் ஆசை: நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை ஸ்ரீ ஜெயந்திரர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி வித்யா சகுந்தலா மூன்று பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண் உட்பட 1186 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3ம் இடத்தை பிடித்தார். வித்யா சகுந்தலாவின் தந்தை தனுஷ்கோடி ஸ்ரீவைகுண்டத்தில் குமரகுருபர் கலைக் கல்லூரியில் பேராசிரியாக உள்ளார். அதுபோல அவரது தாயார் விஜயஜானகியும் திருநெல்வேலி ஸ்கேர் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார்.

3ம் இடம் பிடித்தது குறித்து வித்யா சகுந்தலா கூறியதாவது, தினமும் காலை 4.30மணிக்கே எழுந்து படிக்க தொடங்கிவிடுவேன். அதுபோல் இரவு 11.30 மணி வரை படிப்பேன். ப்ளஸ்2 படித்ததால் வீட்டில் கேபிள் டி.வி., கிடையாது. நன்றாக படித்ததால் என்னால் இந்த மதிப்பெண்களை பெற முடிந்தது. எதிர்காலத்தில் டாக்டராக வர வேண்டும் என்‌பதே என்னுடைய ஆசை.


பிளஸ் 2 தேர்வு முடிவுகள், இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது. மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை, "தினமலர்' இணையதளத்தில் மாணவர்கள் உடனடியாக பார்த்து தெரிந்து கொண்டனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 5,477 பள்ளிகளில் பயின்ற, ஏழு லட்சத்து, 23 ஆயிரத்து, 545 பேர், பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளனர். இத்துடன், தனித்தேர்வர்கள், 57 ஆயிரத்து, 86 பேர் தேர்வு எழுதியுள்ளனர். 1,890 மையங்களில் தேர்வுகள் நடந்தன.இத்தேர்வு முடிவுகள், முதலிடம் பெற்ற மாணவர்களின் விவரம் மற்றும் பாட வாரியாக முதல் இடம் பெற்றவர்களின் விவரமும் இத்துடன் வெளியிடப்பட்டது.

மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் குறித்த விவரம், அந்தந்த பள்ளிகளிலேயே, காலை 10 மணிக்கு அறிவிப்பு பலகைகளில் ஒட்டப்பட்டன.மாணவர்கள், தங்கள் மதிப்பெண் பட்டியலை, வரும் 25ம் தேதி அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம், நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம். தனித்தேர்வர்களாக தேர்வு எழுதியவர்கள், தாங்கள் தேர்வு எழுதிய அந்தந்த தேர்வு மையங்களிலேயே மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்.

விடைத்தாள் ஜெராக்ஸ் மற்றும் மறு கூட்டல் செய்ய விரும்புபவர்கள், வரும் 11 முதல், 16ம் தேதி வரை, அனைத்து முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள், இணை இயக்குனர் (கல்வி) புதுச்சேரி, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள், அரசு தேர்வு மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெறலாம்.விடைத்தாள் நகல் பெறுவதற்கு, மொழிப்பாடம் மாற்றும் ஆங்கிலத் தாள் ஒவ்வொன்றுக்கும், தலா, 550 ரூபாயும், மற்ற பாடங்களுக்கு, 275 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும்.

No comments: