பேரூர்: சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, 30 மணி நேரம் 6 நிமிடம் தொடர்ந்து பேசி, உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளார், தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர். நாகர்கோவிலைச் சேர்ந்தவர் மாடசாமி, 38. தொடக்கப்பள்ளி முதல் எட்டாம் வகுப்பு வரை, கேரளாவிலும், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கம்பம், ராயப்பட்டியில் உள்ள அரசு பள்ளியிலும், திருவனந்தபுரம் பல்கலையில், பி.எஸ்.சி., பட்டமும் பெற்றுள்ளார். தற்போது, கேரளா மாநிலம், இடுக்கிமாவட்டம், பீர்மேடு பகுதியில், கடந்த 1997ம் ஆண்டு முதல், போஸ்டல் அசிஸ்டெண்ட்டாக பணியாற்றி வருகிறார். இவர், சுவிட்சர்லாந்தில் செயல்பட்டு வரும், உலக சமாதான கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ளார். இந்த அமைப்பு, போர், யுத்தம் இல்லாத உலகம் உருவாக்குவதை நோக்கமாகவும், சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வை முக்கியமாக கொண்டும், செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் உறுப்பினராக உள்ள மாடசாமி, யுத்தமில்லாத உலகம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, வனப்பாதுகாப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில்,தொடர்ந்து 30 மணிநேரம் 6 நிமிடம் பேசி, கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன், கடந்த 2009ல், அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில், மைக்பேசியா என்பவர், 28 மணிநேரம் தொடர்ந்து பேசியதே, கின்னஸ் சாதனையாக இருந்தது. தற்போது, அந்த சாதனையை தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் முறியடித்துள்ளார். இடுக்கி அருகே, பீர்மேடு பகுதியில், ஆயிரக்கணக்கானோர் மத்தியில் இச்சாதனையை மாடசாமி நிகழ்த்தியுள்ளார். கோவையில் மாடசாமி கூறியது: ஒவ்வொரு மணி நேரத்துக்கு, ஒரு தலைப்பு வீதம், கூடங்குளம் அணுமின்நிலையம், உலக மகாயுத்தம், அசாம், மேகாலயா, திரிபுரா மாநிலங்களில் லைசென்ஸ் இல்லாமல் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள், சோமாலியா நாட்டில் நிலவும் உணவுபஞ்சம், உலகவெப்பமயமாதல் உள்ளிட்ட 30 தலைப்புகளில் பேசினேன். ஒரு மணி நேரத்துக்கு, ஐந்து நிமிடம் இடைவேளை தரப்பட்டது. பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிர்ப்பு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, உலகவெப்பமயமாதல் குறித்து, பள்ளி குழந்தைகளிடையே, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன், என்றார்.
Tuesday, January 10, 2012
Subscribe to:
Posts (Atom)