Saturday, October 15, 2011

35 ஆண்டு கால பணியில் 33 முறை டிரான்ஸ்பர்!: "நேர்மைக்கு சாட்சி' என்கிறார் சுயேச்சை இன்ஸ்பெக்டர்

மேட்டுப்பாளையம்: ""ஊழலுக்கு எதிராக மக்கள் ஓட்டளிக்க வேண்டும். 35 ஆண்டு போலீஸ் பணியில் 33 முறை டிரான்ஸ்பர் செய்யப்பட்டதே, எனது நேர்மைக்கு சாட்சியம்,'' என்று மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாராஜன் பேசினார்.

மேட்டுப்பாளையம் அனைத்து வணிகர் சங்கம் சார்பில், நகர்மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் சந்திப்பு நடந்தது. தே.மு.தி.க., வேட்பாளர் ஜாபர் சாதிக் பேசுகையில், ""நகரில் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து, தொழில் வளர்ச்சி அடைய முயற்சிப்பேன்,'' என்றார். காங்கிரஸ் வேட்பாளர் சத்தியவதி பேசுகையில், ""பாதாள சாக்கடை திட்டம், விளையாட்டு மைதானம் அமைப்பேன். மத்திய அரசு திட்டத்தில் குடிசை இல்லாத நகரமாக மாற்ற முயற்சி செய்வேன்,' என்றார். பா.ஜ., வேட்பாளர் சதீஷ்குமார், ""சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்க நகரில் அதிக மரக்கன்றுகள் நடப்படும். ஒவ்வொரு வீதிக்கும் பெயர் பலகை வைக்கப்படும். தூய்மையான, சுகாதாரமான நகரமாக மாற்றுவேன். கிழங்கு மண்டிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பேன்,'' என்றார். தி.மு.க., வேட்பாளர் அப்துல் அமீது, ""நகரில் 60 சதவீதம் மக்களுக்கு சீரான குடிநீர் கிடைப்பதில்லை. முதலில் சீரான குடிநீர், சுகாதாரமான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும்,'' என்றார்.
சுயேச்சை வேட்பாளர் மகாராஜன், ""நகரின் தந்தை என்ற பதவிக்கு ஏற்ப நான் நடந்து கொள்வேன். போலீசில் எஸ்.ஐ., இன்ஸ்பெக்டராக 35 ஆண்டுகள் பணியாற்றி உள்ளேன். துறையில் நேர்மையான எனக்கு கிடைத்த பரிசு 33 முறை டிரான்ஸ்பர். எனவே ஊழலுக்கு எதிராகவும், உண்மைக்கும், உழைப்புக்கும் நீங்க ஓட்டளிக்க வேண்டும்,'' என்றார்.

ம.தி.மு.க.,வேட்பாளர் ஜெயக்குமார், ""போக்குவரத்து நெரிசல் சரி செய்வேன். மக்கள் கூட்டு முயற்சியுடன் திட்டங்களை நிறைவேற்றுவேன்,' என்றார். அ.தி.மு.க., வேட்பாளர் நாசர், ""அரசு அறிவித்துள்ள அனைத்து நலத்திட்டங்களையும் மக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்ப்பேன். அனைத்து வணிகர் சங்கம் 13 கோரிக்கைகளை முன் வைத்துள்ளது. நான் வெற்றி பெற்றால், எம்.எல்.ஏ., வாயிலாக முதல்வரிடம் பேசி இவற்றை நிறைவேற்ற பாடுபடுவேன்,'' என்றார். நுகர்வோர் பாதுகாப்பு இயக்க தலைவர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். கோவை மாவட்ட வணிகர் சங்கத்தலைவர் மாணிக்கம், மேட்டுப்பாளையம் அனைத்து வணிகர் சங்க தலைவர் அமீர் ஹம்சா, பொருளாளர் தண்டபாணி, தலைவர் ராஜேந்திரன், நுகர்வோர் முன்னாள் செயலாளர் வதூத், செயலாளர் யுவராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து வணிகர் சங்க செயலாளர் சுபான் வரவேற்றார். அமைப்பாளர் ஹபிபுல்லா நன்றி கூறினார். 
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=331818

Tuesday, October 11, 2011

வீட்டுக்குள் நுழையும் போது தானாக எரியும் மின் விளக்கு

தர்மபுரி : வீட்டுக்குள் நாம் நுழைந்தவுடன் தானா எரியும், வெளியில் வந்தால் தானாக அணையும் மின் விளக்கை தர்மபுரி இந்தியன் அறிவியல் மையம் சார்பில் அறிமுகம் செய்துள்ளது.

தர்மபுரி இந்தியன் அறிவியல் மையம் சார்பில் மாணவர்களின் அறிவியல் திறமையை வளர்க்கவும், சாதாரண பொருட்கள் மூலம் அறிவியல் புதுமை கண்டுபிடிப்புகளை மாணவர்கள் மூலம் செய்யவும் உறுதுணையாக இருந்து வருகிறது. தற்போது, வீட்டுக்குள் நுழைந்தவுடன் எரியும் வகையிலும், அறையை விட்டு வெளியில் வந்தால், லைட் அணையும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.இதற்காக பிரத்தியோகமாக தயார் செய்யப்பட்டுள்ள பெட்டியில் பிளக் பின் மற்றும் ஒரு மின் விளக்கு பொருத்தப்பட்டடுள்ளது.

இந்த பெட்டியில் உள்ள சென்சார் போர்டு மூலம் மனித உடலில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சுக்கள் மூலம் விளக்கு அணைந்து, எரியும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.நம் வீட்டில் உள்ள மின் அமைபின் மொத்தமும் பிரத்தியோக பெட்டியில் இணைக்கும் வகையில் பிளக் பின் மூலம் இணைத்து வைக்க வேண்டும். பகல் நேரங்களில் நமக்கு இது பயன் இல்லை என்பதால், ஆஃப் செய்து வைத்து கொள்ளலாம். இரவு நேரங்களில் நவீன பெட்டியில் இணைப்பு கொடுத்து விட்டால், நாம் எந்த அறைக்கு சென்றாலும் அந்த அறையில் மின் விளக்கு எரியும்.

அதே போல் அந்த அறையை விட்டு வெளியில் வந்து விட்டால், சுவிட்ச் ஆஃப் செய்யாமல் ஆட்டோமெட்டிக்காக மின் விளக்கு எரிவது நின்று விடும்.இந்த கண்டுபிடிப்பை விரைவில் இந்தியன் அறிவியல் மைய விஞ்ஞானி ஜெயபாண்டியன் அறிமுகம் செய்ய உள்ளார். நாகாவதி அணை மாணவர்கள் சரண்யா, சங்கீதா, கீஷோர்குமார் ஆகியோர் தயார் செய்துள்ளனர். 
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=329532