Tuesday, August 9, 2011

அதிகாலையில் சிகரெட் பிடித்தால் புற்று நோய் அதிகரிக்கும்

வாஷிங்டன், ஆக. 9-
 
 
பொதுவாக சிகரெட் பிடித்தால் புற்றுநோய் ஏற்படும் என்ற கருத்து பரவலாக உள்ளது. அதே நேரத்தில் அதிகாலையில் எழுந்தவுடன் சிகரெட் பிடிப்பவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகம் ஏற்படும் என தெரிய வந்துள்ளது.
 
அவர்களுக்கு நுரையீரல், தலை மற்றும் கழுத்து பகுதிகளில் புற்று நோய் பாதிக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  
 
அமெரிக்காவில் ஹெர்சியில் உள்ள பென்ஸ்டேட் மருந்து கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் ஜோசுவா முஸ்கட் நடத்திய ஆய்வில் இது தெரியவந்தது.
 
அதிகாலை நேரத்தில் சிகரெட் பிடிப்பதால் அதில் உள்ள நிகோடின் மற்றும் புகையிலையின் நச்சு பொருட்கள் உடலில் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதனால்தான் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

பாட்னாவில் இரு கருப்பைகளில் தனித்தனியாக குழந்தைகளை பெற்ற பெண்

பாட்னா, ஆக.9-
 
பீகார் மாநிலத்தில், பாட்னாவின் வட பகுதியிலுள்ள மதுராபூர் சாகியா என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரிங்கு தேவி (வயது 28). சமீபத்தில் சிசேரியன் முறையில் ஒரே பிரசவத்தில் இரு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார்.
 
இதில் ஆச்சரியம் என்னவென்றால், இவருக்கு இயற்கையிலேயே இரு கருப்பைகள் உள்ளன. ஒவ்வொரு கருப்பையிலும் ஒரு சிசு வளர்ந்துள்ளது. இது மருத்துவ உலகில் 50 மில்லியன் பேருக்கு ஒருவர் என்ற வகையில் நிகழும் அதிசயமாகும்.
 
இந்த பிரசவத்தில் தாய்க்கோ அல்லது குழந்தைக்கோ ஆபத்து, குறைப்பிரசவம், கருச்சிதைவு ஏற்படுதல் மற்றும் எடை குறைந்த குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு ஆகிய சிக்கல்கள் உள்ளன.
 
தற்போது குழந்தைகள் ஒவ்வொன்றும் முறையே 1.5 மற்றும் 2 கி.கிராம் எடையுடன் நலமாக உள்ளனர். தாயும் நல்ல நிலையில் உள்ளார். ரின்குவிற்கு இது முதல் பிரசவம் அல்ல. 4 வருடங்களுக்கு முன்பே சுக பிரசவத்தில் அவருக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.